
‘ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது’ – இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டு.
இதை காரணம் காட்டி தான், அவர் வரியும், அபராதமும் விதித்துள்ளார். மேலும், கூடுதல் வரி விதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அஜித் தோவலின் ரஷ்ய பயணம்
இந்த நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இவரின் இந்தப் பயணம் இந்தியா – ரஷ்யா உறவை வலுப்படுத்துவதற்கானது என்று கூறப்படுகிறது.
அஜித் தோவலின் இந்தப் பயணம் முன்னரே திட்டமிடப்பட்டது தான். ட்ரம்பின் வரி விதிப்புகளால் இந்தப் பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
அமெரிக்கா மீண்டும் மீண்டும் ரஷ்யா விஷயத்தில் இந்தியாவைக் குற்றம் சாட்டி வருவதால், இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அஜித் தோவலின் பயணம் எந்த ரத்தும் இல்லாமல், நடந்துள்ளது. இது இந்தியாவின் நிலைபாட்டைக் காட்டுகிறது.
இந்தியாவின் உறுதி
நேற்று, இந்தியாவின் வெளியுறவுத் துறை அறிக்கையில், ரஷ்யா உடனான வர்த்தகம் குறித்து, இந்தியா தன் தேச நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கு தேவையான விஷயங்களைதான் செய்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுவும் இந்தியாவின் நிலைபாட்டைத் தெளிவாக்குகிறது.
ஜெய்சங்கர் ரஷ்யா செல்கிறாரா?
இந்த மாதத்தின் இறுதியில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா செல்வதற்கான வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.