
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும் மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், தந்தை மூர்த்தி, தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது, தந்தை மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, மூர்த்தி காவல் உதவி எண்ணான 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு இந்த புகாரை விசாரிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிக்கனூத்து கிராமத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கபாண்டி மற்றும் மணிகண்டனிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த தங்கபாண்டி, அவரது சகோதரர் மணிகண்டன் எங்கள் பிரச்னையை விசாரிக்க நீ யார் என்று கேட்டு தோட்டத்தில் இருந்த அரிவாளைக் கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை துரத்தி உள்ளார்.
நிலைமை கை மீறிப்போவதை அறிந்துகொண்ட சண்முகவேலு தங்கராஜாவிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளார். இருந்தபோதிலும் விடாமல் சண்முகவேலுவை துரத்திய தங்கராஜாவும், அவரது சகோதரரும் சண்முகவேலுவை ஓட ஓட வெட்டி உள்ளனர். இதில், கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சண்முகவேலு உயிரிழந்தார். சம்பவ இடத்தில் ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன், காவல் கண்காணிப்பாளர் கிரீஷ்குமார் யாதவ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.