
ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு 25 சதவிகித வரியுடன், அபராதத்தையும் விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ரஷ்யா உடன் இந்தியா வர்த்தகத்தைத் தொடர்ந்து வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில், இன்னும் இந்தியாவிற்கு வரியை உயர்த்துவேன் என்று கூறியிருக்கிறார்.
இந்திய அரசின் அறிக்கை
இந்தியா மீது விதிக்கப்பட்டிருக்கும் அதிக வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் ரஷ்யா உடன் அமெரிக்காவும் தான் வணிகம் செய்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், “அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், தங்களது அணுசக்தி தொழிற்சாலைக்காக ரஷ்யாவிடம் இருந்து யூரேனியம் ஹெக்ஸாபுளோரைடை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.
அவர்களது எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கு தேவையான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களையும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்து வருகின்றனர்” என்று கூறப்பட்டிருந்தது.
ட்ரம்ப் பதில்
இது குறித்து நேற்று ட்ரம்பிடன் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “எனக்கு அது குறித்து எதுவும் தெரியாது. நாங்கள் அதை என்னவென்று பார்த்து, உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.