
அமெரிக்க நடிகை சிட்னி ஸ்வீனியின் கவர்ச்சியால் சர்சைக்குள்ளான ஜீன்ஸ் விளம்பரத்துக்கு, அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவளித்துள்ளது பங்குச் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கன் ஈகிள் விளம்பரம்
சிட்னி ஸ்வீனியின் “Sydney Sweeney has grate jeans” விளம்பர பிரச்சாரத்தின் வீடியோ ஒன்றில், “மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து சந்ததியினருக்குக் கடத்தப்படுகின்றன, அவை பெரும்பாலும் முடி நிறம், ஆளுமை மற்றும் கண் நிறம் போன்ற பண்புகளை தீர்மானிக்கின்றன. என் ஜீன்ஸ் நீலமானது.” என்ற வரி இடம் பெற்றுள்ளது.
இது போன்ற சிலேடை வரிகளும் சிட்னி ஸ்வீனி காட்சிப்படுத்தப்பட்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
யுஃபோரியா, வைட் லோட்டஸ் போன்ற தொடர்களிலும் எனி ஒன் பட் யூ, இம்மாகுலேட் போன்ற திரைப்படங்களிலும் நடித்தவர் சிட்னி ஸ்வீனி. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஜூலையில் இவர் அமெரிக்கன் ஈகிள் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது, அந்த நிறுவனத்துக்கு வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. விளம்பரம் வைரலாக நிறுவனத்தின் பங்குகளும் உயர்ந்தன.
“Sydney Sweeney has grate jeans”
இந்த விளம்பரங்கள் வெள்ளை மேலாதிக்கத்தை, இனவாதத்தைப் புனிதப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக வெள்ளை முடி, நீல நிறம் போன்றவற்றை முன்வைத்து நாஜி மொழியில் விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “Sydney Sweeney has grate jeans” என்பது மறைமுகமாக “Sydney Sweeney has grate genes” என்பதைக் குறிப்பதாக விமர்சித்தனர்.
மேலும் ஜீன்ஸ் ஆடையை விட விளம்பர பதாகைகள் சிட்னி ஸ்வீனியின் உடல் வாகைக் காட்சிப்பதுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
முன்னதாக தி வோயர்ஸ், யுஃபோரியா போன்ற படைப்புகளில் சிட்னி ஸ்வீனி பாலியல் ரீதியாக காட்சிப்படுத்தப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை இந்த விளம்பரங்களிலும் தொடர்கின்றன.
என்ன கூறினார் ட்ரம்ப்?
இந்த விளம்பரம் இணையத்தில் விவாதங்களை எழுப்பியதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் சிட்னி ஸ்வீனி பிரசாரத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார்.
அதில், “சிட்னி ஸ்வீனி ஒரு பதிவு செய்த ரிபப்ளிக் கட்சியின் உறுப்பினர், ஒரு ஹாட்டான விளம்ப்ரத்தில் தோன்றுகிறார். அது அமெரிக்கன் ஈகிள் விளம்பரம், ஜீன்ஸ்கள் விற்றுத்தீர்கின்றன. போய் வாங்குங்கள்.” என எழுதியுள்ளார். அத்துடன் முற்போக்கு மனப்பான்மையுடன் ஜாகுவார் வெளியிட்ட விளம்பரத்தையும், ஜனநாயக கட்சியின் ஆதரவாளரான பாடகி டெய்லர் ஷ்விஃப்ட்டையும் கடிந்துள்ளார்.
முன்னதாக, “சிட்னி ஸ்வீனி ஒரு பதிவு செய்யப்பட்டக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்றால் எனக்கு அந்த விளம்பரம் மிகவும் பிடிக்குமே” எனக் கூறியிருந்தார். ட்ரம்ப்பின் ஆதரவுக்குப் பிறகு நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தன.
அமெரிக்கன் ஈகிள் விளக்கம்
சிட்னி ஸ்வீனி ஜீன்ஸ் விளம்பர சர்ச்சையைத் தொடர்ந்து அமெரிக்க ஈகிள் நிறுவனம் வெளியிட்ட ஒரு பதிவில், “”Sydney Sweeney has grate jeans” விளம்பரம் ஜீன்ஸைப் பற்றியது மட்டுமே. அவருடைய ஜீன்ஸ், அவருடைய கதைகள்.
எல்லோரும் அவர்களது வழியில் எப்படி அமெரிக்கன் ஈகிள் ஜீன்ஸ் அணிந்து உறுதியாக இருக்கிறார்கள் என்பதை நாங்கள் கொண்டாடுவோம். நல்ல ஜீன்ஸ் யார் அணிந்தாலும் சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளது.