• August 6, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் நீர்வளத்துறை வைப்பாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் விருதுநகர் கெளசிகா நதியை புனரமைக்கும் நவீனமயமாக்கல் பணி மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

கௌசிகா மகாநதியின் வரைபடம்

நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாடு நீர்வளத்தில் சிறந்த மாநிலம் என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது இலக்கியத்தில் ஆறுகளை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன.

காலநிலை மாற்றத்தால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி அவற்றை சீர்திருத்தக்கூடிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது என்பதால் தான் முதலமைச்சர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

நதிகளை சுத்தப்படுத்தும் போது நீலத்தடி நீர் மட்டம் உயரும், விவசாயம் செழிக்கும் என்றும் இந்த திட்டத்தின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பயன்பெறும்”. என்றார்.

மாவட்ட அருங்காட்சியம்

பின்னர் ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “அருங்காட்சியகத்தின் பயனை தொலைவில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் பெற வேண்டும் என்கின்ற தமிழக அரசின் நோக்கத்துடன் 23 மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒரு மாவட்டத்தின் நிலவியல், தொல்லியல், வரலாறு, கலை, பண்பாடு, கனிம வளங்கள், இயற்கை அமைப்புகள், தாவர வகைகள் மற்றும் விலங்கினங்கள் இவற்றை ஒரே இடத்தில் அறிந்து கொள்கின்ற நல்வாய்ப்பினை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்குகின்ற இடமாக மாவட்ட அருங்காட்சியகங்கள் திகழ்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அருங்காட்சியம் அமைத்தல் என்ற அரசின் சீரிய நோக்கத்தினை செயல்படுத்தும் விதத்தில் அருங்காட்சியகங்கள் துறை செயல்பட்டு வருகிறது” என்றார்.

அப்போது பணியினை மேற்கொண்டு வரும் காண்ட்ராக்டரை பணியை விரைந்து முடியுங்கள், நீங்கள் முடிக்கும் வரை முதல்வர் காத்திருக்க முடியுமா என்று கடிந்து கொண்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *