
இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, “கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது. உண்மையான இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள்” என ராகுல் காந்தியை விமர்சித்திருக்கிறது. இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “மதிப்புக்குரிய நீதிபதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கிறேன். அதே நேரம், உண்மையான இந்தியர் யார் என்பதை அவர்கள் தீர்மானிக்க மாட்டார்கள். ஆளும் அரசைக் கேள்வி கேட்பது எதிர்க்கட்சித் தலைவரின் கடமை.
என் சகோதரர் ஒருபோதும் ராணுவத்திற்கு எதிராகப் பேச மாட்டார், அவர் அவர்களை மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துகிறார்.” என்றார். காங்கிரஸ் சமூக ஊடகத் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட், “ராகுல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகள் தேவையற்றது. நமது எல்லைகளைப் பாதுகாக்க அரசு தவறும்போது, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகக் கடமையாகும்” எனத் தெரிவித்திருக்கிறார்.