
தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர் தூவி, மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திடலில் மக்களை சந்தித்து பேசுகையில், “விவசாயிகளுக்கு என எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை, மாறாக அதிமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு தடுத்து நிறுத்துகின்ற வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழகத்தில் கஞ்சா விற்காத இடமே இல்லை என்ற வகையில் போதைப் பழக்கங்கள் அதிகரித்து வரக்கூடிய சூழலால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக தங்கம் விலை நிலவரத்தை பார்ப்பதுபோல தற்போது தமிழகத்தில் கொலை நிலவரத்தை பார்த்து வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சட்ட ஒழுங்கை காப்பாற்றாத திமுகவின் ஆயுட்காலம் இன்னும் ஏழு மாதங்கள் மட்டுமே உள்ளது. நான்காண்டு காலம் மக்களை கண்டு கொள்ளாமல் தற்போது பல்வேறு திட்டங்கள் வாயிலாக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. அந்த வகையில் திமுக என்றால் மோசடி, மோசடி என்றால் திமுக என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்ததாக ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அதிமுக, பாஜக கூட்டணியே மக்கள் நம்பி உள்ளதாகவும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக ஆட்சி அமைக்கும்” எனவும் மக்களிடையே உரையாற்றினார்.