
ரிஷிகேஷ்: உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் மேக வெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியை 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர்.
வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மிக பெரிய வெள்ளம் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் சுமார் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.