• August 5, 2025
  • NewsEditor
  • 0

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22-க்குள் மாநாடு வைத்துக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டதாகவும், மாற்று தேதியை தலைவர் அறிவிப்பார் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், காவல்துறையின் கோரிக்கையின்பேரில் ஆகஸ்ட் 21-ம் தேதி மாநாடு நடத்தப்படும் என்று விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

விஜய்

அறிக்கையில், “மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.

இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25-ம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும், எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது.

அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21-ம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று, மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரமாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே கழகத் தோழர்கள் வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *