
புதுடெல்லி: யார் உண்மையான இந்தியர் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரியங்கா காந்தி இன்று இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை தொடங்கிய ராகுல் காந்தி, யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்தது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவை அனைத்தையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.