
ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் உபரிநீரை வெளியேற்றாமல் நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த நீர்வளத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
வைகை அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் இங்கு அதிகளவில் சேகரமாகி வருகிறது. இதனால் ஜூலை 20-ம் தேதி 63.77அடியாக இருந்த நீர்மட்டம் (மொத்த உயரம் 71) படிப்படியாக அதிகரித்து 26-ம் தேதி 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்ததால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.