
இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பர் இல்லை என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரி கணிசமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் மீது 25% வரியை அறிமுகப்படுத்திய ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிபொருள் மற்றும் ராணுவ ஆயுதங்கள் வாங்குவதனால் இந்தியாவின் மீது கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
அதன்படி, அடுத்த 24 மணி நேரத்துக்குள் இந்தியா மீது கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர்.
சி.என்.பி.சி தளத்தில் பேட்டியளித்த அவர், இந்தியாதான அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிப்பதாகக் கூறியுள்ளார். “இந்தியா ஒரு நல வர்த்தக கூட்டாளி அல்ல, ஏனென்றால் அவர்கள் நம்முடன் அதிக வணிகம் செய்கின்றனர். ஆனால் நாம் அவர்களுடன் செய்வதில்லை. அதனால்தான் அவர்கள் மீது 25% வரி விதித்தேன். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறேன்” எனப் பேசியுள்ளார் அவர். ‘
மேலும், “அவர்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் போர் இயந்திரத்துக்கு எரிபொருள் ஊற்றுகின்றனர். அவர்கள் இதைத்தான் தொடரப்போகிறார்கள் என்றால், எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக ட்ரம்ப் இந்தியாவை மிரட்டுவதை கடுமையாக சாடியது ரஷ்யா. “எங்கள் வர்த்தக பங்குதாரர்களை அச்சுறுத்துவது மாஸ்கோவை (எங்களை) அச்சுறுத்துவதைப் போன்றதாகும்” எனக் கூறியது.

ட்ரம்ப்பின் எச்சரிக்கைகள் “நியாயமற்றது மற்றும் காரணமில்லாதது” எனக் கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது இந்திய அரசாங்கம்.
அதில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டுவதன் மூலம் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவைக் குறிவைப்பதாக வெளியுறவுத்துறைக் கூறியுள்ளது.
மேலும் இந்தியா அதன் மக்களின் தேவைக்காக மலிவு விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியது சர்வதேச சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளது. அத்துடன் இந்தியா ரஷ்யாவுடனான் வர்த்தகத்தை நிறுத்த அழுத்தம் தரும் நாடுகளே ரஷ்யாவுடன் வர்த்தகத்தைப் பேணுவதாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது!