
சீனாவில் பாரீஸ் நகரத்தை போலவே ஒரு இடம் இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? சீனாவில் அமைந்துள்ள தியாண்டுசெங் கிராமம், பாரீஸின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம், பிரான்ஸின் தலைநகரான பாரீஸைப் போலவே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு அம்சமே 108 மீட்டர் உயரமுள்ள ஈபிள் கோபுரத்தின் மாதிரி தான், பாரீஸின் அடையாளமாக சீனாவிலும் உள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய ஈபிள் கோபுர பிரதியாகும். பாரீஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ், வெர்சாய்ஸ் தோட்டங்கள் மற்றும் பரோக் நீரூற்றுகள் என பாரீஸின் சில முக்கிய அம்சங்களை இந்த கிராமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் 10,000 பேர் வசிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த கிராமம், குறைந்த மக்கள் தொகையால் “பேய் நகரம்” என்று அழைக்கப்பட்டது.
2013இல் 2,000 பேர் மட்டுமே வசித்தனர். ஆனால் 2017ஆம் ஆண்டு மக்கள் தொகை 30,000 ஆக உயர்ந்தது. இருந்தாலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகள் இன்னும் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், இந்த கிராமம் ஹாங்ஸோவின் மையப்பகுதியிலிருந்து 40 நிமிட தொலைவில், பொது போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதியில் அமைந்திருப்பது தான்.
தியாண்டுசெங் கிராமம், சீன மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக திருமண புகைப்படங்களுக்கு இது பிரபலமாக உள்ளது. இங்கு உள்ள உணவு விடுதிகளில் பிரெஞ்சு உணவுகளுக்கு பதிலாக சீன உணவு வகைகளே பரிமாறப்படுகின்றன.
இந்த கிராமம், சீனாவின் “டூபிளிடெக்சர்” (duplitecture) போக்கின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற இடங்களைப் பிரதியெடுக்கும் முயற்சியை பிரதிபலிக்கிறது. அசல் பாரீஸ் அனுபவத்தை இந்த இடம் முழுமையாக வழங்க முடியவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.