
உக்ரைன் நாட்டின் உயர் மட்ட தூதுக்குழு சென்ற விமானம் கடந்த ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 3) ஜெய்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருக்கிறது.
அந்த விமானத்தில் உக்ரைனின் முதல் பெண்மணியும் ஜனாதிபதி விளோதிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவியுமான ஒலேனா வோலோடிமிரிவ்னா ஜெலென்ஸ்கா மற்றும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் ஜெலென்ஸ்கி அரசாங்கத்தின் பிற மூத்த உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தினர்.
ஜப்பானில் உள்ள டோக்கியோ நகருக்கு ராஜாந்திர காரியங்களுக்காக சென்ற அந்த விமானம் இந்தியாவில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றுள்ளது. ஜப்பானுக்கு உயர்மட்ட தூதுக்குழு அனுப்பப்பட்டது ஏன் என்பதைப் பின்னர் பார்க்கலாம்.
இதற்கான கோரிக்கையை முன்னரே ஏற்றுக்கொண்டிருந்தது வெளியுறவுத்துறை. மேலும் உக்ரைன் தூதுக்குழு வரும்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்துக்கு ஆகஸ்ட் 1ம் தேதியே தெளிவுபடுத்தியுள்ளனர்.
பயணத்துக்கு முந்தைய சோதனைகளிலிருந்து தூதுக்குழுவுக்கு விலக்கு அளிப்பது, உரிய மரியாதை மற்றும் வசதிகள் வழங்குவது குறித்து நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

23 பேர் அடங்கிய தூதுக்குழு மாலை 6:30 மணியளவில் வந்திறங்கியிருக்கிறது. அவர்களது விமானம் எரிபொருள் நிரப்பப்படும் வரை வி.ஐ.பி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் அதிகாரிகள் நேரில் சென்று அவர்களை வரவேற்றதுடன், அவர்களுடன் இணைந்து சிற்றுண்டி பகிர்ந்துள்ளனர்.
மீண்டும் மறுநாள் காலை 8:15 மணியளவில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். உக்ரைன் உயர்மட்ட தூதுக்குழு ஜப்பான் உடனான உறவு குறித்த முக்கிய விவாதங்களை நிகழ்த்த சென்றுள்ளனர்.
ரஷ்யாவுக்கு எதிரான ஜப்பானின் பொருளாதார தடைகளை அதிகரிக்கவும், உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு உதவவும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் உக்ரைன் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன.1991ம் ஆண்டு சோவியத்தில் இருந்து பிரிந்த உக்ரைனைத் தனித்த இறையாண்மை கொண்ட நாடாக கருதிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
தற்போது இந்தியா ரஷ்யாவிடம் வர்த்தகம் கொள்வதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக ஜெலன்ஸ்கி சில முறை குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.