
லண்டன் தெருக்களில் குப்பைத் தொட்டிகள், தூண்கள் மற்றும் மரங்கள் இருக்கும் பகுதிகளெல்லாம் கருஞ்சிவப்பு வண்ணம் பூசியதுபோல பான் மசாலா எச்சில் கறைகளோடு தோற்றமளிக்கும் வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பலரும் வெளிநாடுகளிலிருந்து குடியேறிய மக்களைக் குற்றம் சொல்லி வருகின்றனர். ஹாரோ ஆன்லைன் என்ற தளம் கூறுவதன்படி, லண்டன் பெருநகரத்தின் ரேனர்ஸ் லேன் மற்றும் நார்த் ஹாரோ பகுதிகளில் இதுபோன்ற கறைகள் காணப்படுகின்றன.
ரேனர்ஸ் லேனில் செல்பவர்கள் இங்கு, இது மிகவும் சாதாரணமாகிவிட்டதாக முகம் சுழிக்கின்றனர். குறிப்பாக குட்கா மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை விற்கும் கடைகள் மற்றும் டேக்அவே உணவகங்களுக்கு வெளியில் இந்தக் கறைகள் அடர்ந்து காணப்படுகின்றன.
குட்கா என்பது என்ன?
குட்கா பெரும்பாலும் வட இந்தியர்களாலும் சில அண்டை நாட்டவர்களாலும் உட்கொள்ளப்படும் மென்று துப்பும் புகையிலையாகும். பாக்கு (சுபாரி என்றும் அழைக்கப்படுகிறது), புகையிலை, இனிப்புகள் மற்றும் பிற பொருட்களுடன் கலந்து இவை விற்கப்படுகின்றன. சிறிய பைகளில் அடைக்கப்படும் விற்கப்படும் இவற்றை மெல்லும்போது லேசான போதை மயக்கம் ஏற்படும்.
லண்டனுக்கு அதிக அளவில் இந்தியர்கள் இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ளதாலும், வட இந்தியர்களிடையே குட்கா பயன்படுத்தும் பழக்கம் பரவலாகக் காணப்படுவதாலும் நகரின் சுத்தம் சீரழியும் இதுபோன்ற செயல்களுக்கு இந்தியர்கள் தான் கரணம் எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Gutka and paan spitting has made its way to London now- shameful and disgusting. pic.twitter.com/4VIpDw9MtE
— Meru (@MeruBhaiya) August 3, 2025
லண்டனில் குட்கா விற்பனை சட்டப்பூர்வமானதா?
ஐக்கிய ராச்சியத்தில் குட்கா விற்பனையைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. எனினும் விற்பனை நிலையங்கள் குட்காவை விநியோகிக்க HMRC-ல் (வருவாய் மற்றும் சுங்கத் துறை) பதிவு செய்தல் அவசியம். மேலும், சில கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
குட்காவுக்கு எதிராக, “தவறான பேக்கேஜிங் மற்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கைகளுக்கு இணங்காத தயாரிப்பு” எனக் கூறி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர் ரேனர்ஸ் லேன் அதிகாரிகள்.
குட்கா விற்பனை செய்யும் 6 கடைகளைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஒரே கடையில் பெருமளவு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.