• August 5, 2025
  • NewsEditor
  • 0

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஹுலிகட்டி என்ற இடத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் சுலைமான் கோரிநாயக்.

இப்பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்த 12 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டனர். அவர்களது உயிருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.

இது குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்ததில் தண்ணீரில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. உடனே இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில் பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்தது அதே பள்ளியில் படிக்கும் 5-வது வகுப்பு மாணவன் என்று தெரிய வந்தது.

சித்தராமையா

இதையடுத்து அம்மாணவனை பிடித்துச்சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாணவனிடம் விஷம் கலந்த பாட்டிலை கொடுத்து தண்ணீர் தொட்டியில் கலக்க சொன்னது கிருஷ்ணா மதார் என்று தெரிய வந்தது.

கிருஷ்ணா மதாரை பிடித்து சென்று விசாரித்தபோது அவரை மிரட்டி சிலர் இக்காரியத்தை செய்ய செய்துள்ளனர் என்று தெரிய வந்ததது. சாகர் பாட்டீல் மற்றும் நாகனகவுடா பாட்டீல் ஆகியோர் கிருஷ்ணாவை மிரட்டி இக்காரியத்தை செய்ய வைத்துள்ளனர்.

கிருஷ்ணா வேறு சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிகிறது. இக்காதலனை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என்று மிரட்டி அவர்கள் கிருஷ்ணாவிடம் இக்காரியத்தை செய்ய சொல்லி இருப்பதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணாவை மிரட்டிய சாகர் பாட்டீல் இந்து அமைப்பான ஸ்ரீ ராம சேனாவின் மாநில தலைவராக இருக்கிறார். சாகர் பாட்டீல் தான் இக்காரியத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இதையடுத்து சாகர் பாட்டீலை அழைத்து சென்று போலீஸார் விசாரித்த போது, அங்குள்ள பள்ளியில் சுலைமான் நீண்ட காலமாக முதல்வராக இருந்தது பிடிக்காமல் அவருக்கு களங்கத்தை ஏற்படுத்தி அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து விட சொன்னதாக சாகர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள்

இதையடுத்து கிருஷ்ணா உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தார். இது “மத வெறுப்பு மற்றும் அடிப்படைவாதத்தால் இயக்கப்படும் கொடூரமான செயல்” என்று கூறிய அவர், இந்தக் குற்றம் சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளர். அவர் இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்.

பெலகாவி மாவட்டம், சவதாட்டி தாலுகாவில் உள்ள ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தீங்கிழைக்கும் நோக்கத்துடன், மூன்று பேர் பள்ளி குழந்தைகளின் குடிநீரில் விஷம் கலந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 15 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில், பல குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக, யாரும் உயிரிழக்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *