
தமிழக அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரை வைப்பதற்கு எதிராக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார்.
திமுக தரப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்துக்கெல்லாம் ‘அம்மா’ எனப் பெயர் வைத்ததைச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
“அம்மா என்பது ஒரு யூனிவர்சல் சொல். அது என்ன தனிப்பட்ட நபரின் பெயரா? AMMA என்பதற்கான விளக்கத்தை ஏற்கெனவே கொடுத்திருக்கிறோம். எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எனப் பொருள்தரும் abbreviation (ஒரு சொற்றொடரின் சுருக்க வடிவம்) அம்மா.
ஸ்டாலின் நலம் காக்கும் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் எனப் பெயர்வைக்க அது என்ன உங்கள் அப்பன் வீட்டு பணமா? கருணாநிதி சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொடுங்கள் எங்களுக்கு மாறுபட்டக் கருத்து இல்லை, அவருடைய அப்பா முத்து வேலர் பெரிய டாடா பிர்லா குடும்பத்துக்கு சொந்தக்காரர் அவர் பணத்திலிருந்து எடுத்துக்கொடுங்கள்.

அப்பன் பாட்டன் பணத்தைக் கொடுத்தால் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், மக்கள் வரி பணத்தில் தொடங்கும் திட்டங்களுக்கு உங்கள் பெயர் வைக்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.” எனக் கடுகடுத்தார் ஜெயக்குமார்.
மேலும், “நலம் காக்கும் ஸ்டாலின் எனப் பேசுகிறீர்களே, வட சென்னையில் பாருங்கள் எல்லா இடமும் குப்பையும் கூளமுமாக இருக்கிறது. சுத்தம் செய்யாமல் குப்பை மேடுகளாக இருக்கிறது…. இந்த நான்கரை வருடமாக மருந்து, மாத்திரை, டாக்டர் இல்லாமலா இருந்தது, தேர்தல் வருவதனால் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வருகிறது.
ஸ்டாலினுக்கு யோசனை சொல்வதற்கு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி ஏதாவது சொல்வார்கள். ஆனால் மக்கள் அதையெல்லாம் நம்புகிறவர்கள் இல்லை. தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது, மக்கள் ரிவீட் அடிக்கக் காத்திருக்கிறார்கள்.” எனப் பேசினார்.