
மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்தவர் பாக்யஸ்ரீ(35). இவரிடம் அதே ஊரை சேர்ந்த ஷேக் ரியாஸ்(42) என்பவர் தன்னை திருமணம் செய்யும்படி நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்தார். அவரை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று துன்புறுத்தி வந்தார். அதுவும் முஸ்லிம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்யவேண்டும் என்று ஷேக் கூறி வந்தார். ஆனால் பாக்யஸ்ரீ அதற்கு மறுத்து வந்தார். திடீரென இரவு பாக்யஸ்ரீ வீட்டிற்குள் நுழைந்த ஷேக் தன்னிடம் இருந்த கத்தியால் பாக்யஸ்ரீயை சரமாரியாக குத்தினார். மேலும் பாக்யஸ்ரீயின் கழுத்திலும் கத்தியால் வெட்டிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பாக்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷேக்கை கைது செய்தனர். ஷேக் மீது இதற்கு முன்பு பாக்யஸ்ரீ உள்ளூர் போலீஸ் செக்போஸ்டில் புகார் செய்தபோது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே அப்போலீஸார் மீதும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பாக்யஸ்ரீ உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதிச்சடங்கை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து பாக்யஸ்ரீயின் சகோதரி சுபத்ரா கூறுகையில்,”ஷேக் எனது சகோதரியின் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். நீண்ட நாட்களாக மதம் மாறி திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் எனது சகோதரி அதற்கு சம்மதிக்கவில்லை”என்று தெரிவித்தார்.