
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவு
மும்பையில் பல இடங்களில் புறாக்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் இருக்கிறது. குறிப்பாக கேட்வே ஆப் இந்தியா, தாதர், மாட்டுங்கா என முக்கியமான இடங்களில் இந்த கபூத்தர்கானா எனப்படும் புறாக்களுக்கு உணவு கொடுக்கும் இடங்கள் செயல்பட்டு வந்தன.
அந்த இடங்களில் ஆயிரக்கணக்கான புறாக்கள் முகாமிட்டு பொதுமக்கள் கொடுக்கும் உணவு தானியங்களை சாப்பிட்டு வாழ்ந்து வந்தன.
மும்பை முழுவதும் 50 இடங்களில் இது போன்ற கபூத்தர்கானாக்கள் இருக்கின்றன. இந்த புறாக்களால் பொதுமக்களுக்கு உடல்நலக்கோளாறு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 31-ம் தேதி மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
தடையை மீறி புறாக்களுக்கு உணவு கொடுப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புறாக்களால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு பிரச்னை போன்ற உடல்நலக்கோளாறு ஏற்படுவதாகவும், பாரம்பரிய சின்னங்கள் மீது புறாக்கள் எச்சமிடுவதால் அவை பாதிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயின் மத நம்பிக்கை
மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்கும் கலாச்சாரம் குஜராத்தி மற்றும் ஜெயின் வணிகர்களால் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது,
இது நகரின் முக்கிய மூலைகளில் கபுதர்கானாக்கள் உருவாக காரணமாக அமைந்தது. குஜராத்தியர்களும், ஜெயின் மதத்தவர்களும் புறாக்களுக்கு உணவளிப்பதை ஒரு புனிதமான செயலாகக் கருதுகின்றனர் மற்றும் புறாக்களுக்கு உணவு கொடுப்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று நம்பினர்.

ஜெயின் மதத்தில், புறாக்களுக்கு உணவளிப்பது அதன் நெறிமுறைகளின் முக்கியமான ஒன்றாகும். கோவில்களுக்கு அருகில் அல்லது கோயில் அறக்கட்டளை நடத்தும் இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பது பல ஜெயின் குடும்பங்களின் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் புறாக்களுக்கு உணவு கொடுக்கும் இடங்களை தார்ப்பாய் மூலம் மூடிவிட்டனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை மாநகராட்சியின் இந்நடவடிக்கையை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்களும், ஜெயின் மதத்தினரும் மும்பை கொலாபாவில் இருந்து கேட்வே இந்தியா வரை போராட்ட பேரணி நடத்தினர்.
விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை
உணவளிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சாப்பாடு இல்லாமல் புறாக்கள் உயிரிழப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜெயின் மதக்குரு நரேஷ்சந்திரா புறாக்களுக்கு மீண்டும் உணவளிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்.
கோர்ட் உத்தரவை மீறி புறாக்களுக்கு உணவு கொடுப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதோடு கடந்த 3-ம் தேதி புறாக்களுக்கு உணவு கொடுத்தவர்கள் மீது போலீஸார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் குஜராத்தியர்கள் கணிசமாக இருகின்றனர்.

அவர்களின் தொடர் போராட்டம் காரணமாக மும்பை பா.ஜ.க அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா புறாக்களுக்கு உணவு கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அதில், கபூத்தர்கானாக்கள் இடிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ள மங்கள் பிரபாத் லோதா, உண்மையில் பொதுமக்களுக்கு உடல்நலக்கோளாறு ஏற்படுவதற்கு புறாக்கள் மட்டும்தான் காரணமா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் இப்பிரச்னைக்கு தீர்வு காண நீதிமன்ற மேற்பார்வையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தியர்களின் அதிருப்தியை தொடர்ந்து முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ் விலங்குகள் நல ஆர்வலர்களை அழைத்து இப்பிரச்னை குறித்து பேசினார்.
பின்னர் இது குறித்து பட்னாவிஸ் பேசுகையில், ”புறாக்களுக்கு உணவு கொடுக்க மாநில அரசோ அல்லது மாநகராட்சியோ தடை விதிக்கவில்லை. கோர்ட் உத்தரவை தொடர்ந்தே கபூத்தர்கானாக்கள் மூடப்பட்டது. இதில் அரசுக்கு எந்த வித பங்கும் கிடையாது. இப்பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். கபூத்தர்கானாவிற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு 60-க்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

என்ன பிரச்னை?
மும்பையில் புறாக்கள் சொந்தமாக உணவு தேடுவதை விடுத்து பொதுமக்கள் கொடுக்கும் உணவை நம்பியே வாழ்கின்றன. இப்போது உணவு கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் புறாக்கள் உணவு கிடைக்காமல் திண்டாடுகின்றன.
புறாக்களின் கழிவுகள் மற்றும் இறகுகள் வைரஸ் உள்பட தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளைக் கொண்டு வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன, அவை ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் போன்ற நீண்ட கால சுவாச பிரச்னைகளையும் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி பொறியாளர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது புறா மோதி கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது குறிபிடத்தக்கது.