
மூலிகை பெட்ரோல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த ராமர் பிள்ளை மூலிகையிலிருந்து பெட்ரோல் தயாரிப்பதாக கூறி தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.
இவர் பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை பெட்ரோலை ரூபாய் 20-க்கு விற்பனை செய்ய உள்ளதாக பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறார். இவரது கண்டுபிடிப்பு ரசாயனம் எனக்கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாக மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் தீர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ராமர் பிள்ளை கூறுகையில், “சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கூடுதல் நீதிமன்றம் என் மீதும் எனது மூலிகை பெட்ரோல் மீதும் தவறு இல்லை எனக்கூறி தீர்ப்பு வழங்கியது. மேலும் ராமர் பிள்ளையிடம் கைப்பற்றப்பட்ட அனைத்து பொருள்களையும் அவரிடம் வழங்க வேண்டும். அவரிடம் கைப்பற்றப்பட்ட பொருள்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த தொகையை 23 வருட வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
எனது கண்டுபிடிப்பு தவறாக இருந்தால் பல ஆண்டுகளுக்கு முன் வழக்கு பதிவு செய்யும்போது எனக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், விற்பனை சான்று ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை.
வங்கியில் மாயமான பணம்
வங்கியில் எனது கணக்கு முடக்கப்பட்டு பணம் எடுக்க முடியாத சூழல் இருந்தது. தற்போது எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும் சென்னை டி.நகரில் உள்ள தனியார் வங்கியில் போய் வட்டியுடன் பணத்தை கேட்டதற்கு பணம் மாயமாகி விட்டதாக கூறுகிறார்கள்.
தமிழக முதல்வருக்கு எனது பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தேன். அவரது உத்தரவின்படி டி.நகர் காவல் துறையினர் வங்கியில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையிலும் வங்கி கணக்கில் இருந்த பணம் மாயமானதாக அறிக்கை வழங்கப்பட்டது. எனவே இந்த அறிக்கையை மூலமாக வைத்து மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். இது தொடர்பான விசாரணைக்கு இன்று வங்கி அதிகாரிகள் ஆஜராக உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் எரிபொருள் நிறுவனம் எனது கண்டுபிடிப்பை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.
இறுதியான சோதனைக்கு என்னுடைய கண்டுபிடிப்பு மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் சோதனை முடிவு வந்தவுடன், நான் இருப்பு வைத்துள்ள மூலிகைகளை கொண்டு சுமார் 10 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிக்க உள்ளேன். சுதந்திர தினத்திற்கு முன்னதாக எனது கண்டுபிடிப்பை மக்களுக்கு வழங்க உள்ளேன். உயிரே போனாலும் 13ஆம் தேதி எனது கண்டுபிடிப்பை மக்கள் கையில் சேர்க்க உள்ளேன். நான் தயாரிக்க உள்ள 10 கோடி லிட்டர் மூலிகை பெட்ரோலில், ஒரு கோடி லிட்டர் என்னை நம்பி பணம் கொடுத்த நண்பர்களுக்கும், மீதமுள்ள ஒன்பது கோடி லிட்டர் பெட்ரோலை இந்திய ராணுவத்துக்கும் வழங்க தயாராகிவிட்டேன்” என்றார்.