
சென்னை: பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என பாமக தலைவர் அன்புமணி பேசி இருந்ததற்கு பதிலளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் அன்புமணி பேச வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாமகவைச் சேர்ந்த அன்புமணி, தன் தந்தையான ராமதாஸை எதிர்த்து தமிழகத்தில் திக் விஜயம் செய்ய புறப்பட்டிருக்கிறார்.
வேலூருக்கு வந்து ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, என்மீது ஒரு சிறிய பாசமழையை பொழிந்துவிட்டு, அதே வேகத்தில் நான் அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகள் குறித்து விவரம் தெரியாமல் கொச்சைப்படுத்தி ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கிறார். அதாவது, இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டியதுண்டா என்று முழக்கமிட்டிருக்கிறார்.