• August 5, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: சிலர் எப்போதும் எதையோ சிந்தித்துக்கொண்டு பரபரப்பாகவே இருப்பதைப் பார்க்கிறோம். இப்படி எதையோ யோசித்துக்கொண்டே இருப்பது மூளைக்கு நல்லதா, உடலுக்கு ஓய்வு அவசியம் என வலியுறுத்தப்படும்போது, மூளைக்கு ரெஸ்ட் அவசியமில்லையா, அதை எப்படி உறுதிசெய்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் சிகிச்சை  மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

நரம்பியல் மருத்துவர் மீனாட்சிசுந்தரம்

ஓவர் திங்க்கிங் என்றாலும் அது எதை பற்றியது என்பதுதான் இதில் முக்கியம்.  நல்ல விஷயங்களை யோசித்தால் நல்லதுதான். கெட்டதை யோசித்து சோர்வாக உணர்ந்தால் அது தேவையில்லை.  நல்லதை நினைத்தால் நல்லதுதான் நடக்கப் போகிறது. அதனால் சந்தோஷமாக இருப்பார்கள். அந்த சந்தோஷத்தின் காரணமாகவும் மூளை சிறப்பாக இருக்கும். மூளையை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பயன்படுத்த வேண்டும். 

நம்மில் யாரும் மூளையை 100 சதவிகிதம் உபயோகிப்பதில்லை என்பதுதான் நிஜம்.  30 முதல் 40 சதவிகிதம்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.  எவ்வளவு பெரிய விஞ்ஞானி, அறிவாளியாக இருந்தாலும் அவர்களும் மூளையை 100 சதவிகிதம் உபயோகித்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் 50 முதல் 60 சதவிகிதம் மட்டுமே உபயோகிப்பார்கள். மூளைக்கு முழுமையாக வேலை கொடுத்தால்தான் அது முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மூளையானது 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டேதான் இருக்கும்.

அதற்கு, பாசிட்டிவ் சிந்தனை, ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, அதிக இனிப்பு, உப்பு தவிர்த்தல், யோகா போன்றவையே போதுமானது. ஒருவருக்கு மூளையின் செயல்திறன் 60 சதவிகிதமாக இருக்கும் நிலையில், முழுமையாகப் பயன்படுத்தாமல், 20 சதவிகிதம் குறைகிறது என வைத்துக்கொள்வோம். அதாவது, 40 சதவிகிதம் என்கிற நிலைக்குச் செல்லும்போது, மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். மூளைக்குப் போதுமான வேலை கொடுத்து 60 சதவிகித செயல்திறனுக்குக் குறையாத வகையில் தக்கவைத்துக் கொண்டாலும் அல்லது அதற்கும் கூடுதலாக செயல்திறனை உயர்த்திக் கொண்டாலும் மறதி பாதிப்பு ஏற்படாமல் சமாளிக்க முடியும்.

டிமென்ஷியா போன்ற நோய்நிலைகளில், மூளையின் செயல்பாடு 40 சதவிகிமாகக் குறையும்போது அறிகுறிகள் வெளியே தெரியவரும். அதுவே 60 சதவிகிதம் மூளையைப் பயன்படுத்தும் நபர், அதை 80 சதவிகிதமாக்கினால், அது 40 சதவிகிதமாகக் குறைய பல காலம் ஆகும்.

மூளைக்கு ரெஸ்ட் அவசியமா?

அந்நிலையில் அந்த நபருக்கு பாதிப்புகளும் இருக்காது. எனவே, முடிந்த அளவுக்கு மூளையை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதுதான் சிறப்பானது. மூளையானது 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். அதனால் மூளை களைப்பெல்லாம் அடையாது. அதற்கு ஓய்வெல்லாம் அவசியமில்லை. அதுவே, தொடர்ந்து தூக்கமில்லாமல் போகும்போது, நச்சுகள் சேகரமாகி, மூளையின் செயல் திறன் பாதிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *