
திருநெல்வேலி: “திமுக கூட்டணியில் விரிசல் வந்துவிட்டது. அந்தக் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்” என்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கொட்டும் மழையில் பேசினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் பாளையங்கோட்டையில் பேசியது: “திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று மு.க. ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்த கூட்டணியில் விரிசல் வந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அந்தக் கூட்டணி உடையும். தென்னை மட்டையில் ஒவ்வொருவராக தொங்கி கொண்டிருப்பதுபோல் விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக கட்சிகள் தொங்கி கொண்டிருக்கின்றன. ஒருவர் கைவிட்டுவிட்டால் அனைத்து கட்சிகளும் வீழ்ந்துவிடும். கூட்டணியை நம்பி திமுக இருக்கிறது. ஆனால், மக்களை நம்பி அதிமுக இருக்கிறது.