
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், ‘எட்டு தோட்டாக்கள்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.
அப்படி 2021ஆம் ஆண்டு சினிமா துறையில் பட்டியலின மக்களின் முன்னேற்றம் குறித்து அவதூறு கருத்துகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தது.
பின்னர், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். அவர் டெல்லியில் மறைந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மீரா மிதுனின் தாயார், தனது மகளைக் காணவில்லை என்றும், அவரது இருப்பிடம் தெரியவில்லை என்றும் கூறி மகளைக் கண்டுபிடித்து தரக் கோரி மனு அளித்துள்ளார்.
இந்த மனுவின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் மீரா மிதுனை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.