
விருதுநகர் தனியார் மண்டபத்தில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “வருகின்ற ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் பாஜகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 பாராளுமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது.
அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கமாகவும் பூத் கமிட்டி கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டம் கட்சியை வலுப்படுத்தும். எங்கள் கூட்டணியில் யார் எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர்களுக்குப் பலமான முறையில் வேலை பார்ப்பதற்கு பாஜக தயாராக உள்ளது” என்று கூறினார்.
திமுகவில் இணைய உள்ளதாக வரும் தகவல் எள்ளளவும் உண்மை இல்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, “ஓபிஎஸ் எங்கள் கூட்டணியிலிருந்து கொண்டு இந்த மாதிரியான கருத்துக்கள் சொல்லி இருந்தால் நாங்கள் பதில் சொல்லலாம். எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறிய காரணத்தினால் அவரைப் பற்றிப் பேசுவது தனிப்பட்ட நபரை விமர்சிப்பது போன்ற ஆகிவிடும். அது பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது” என்று பதிலளித்தார்.
“ஓபிஎஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியதால் அதிமுக, பாஜக வாக்கு சதவீதம் குறைய வாய்ப்புள்ளதா?” என்ற கேள்விக்கு, “எந்தக் காரணத்தைக் கொண்டும் எங்களது கூட்டணி ஓட்டு எங்கேயும் குறையப்போவதில்லை. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது. தேர்தல் வந்தால் மக்கள் அதனைத் தீர்மானிப்பார்கள். நாம் அதை ஆருடம் எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

“தமிழகத்திற்கு இருமுறை பிரதமர் மோடி வந்துள்ளது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா?” என்ற கேள்விக்கு, “தூத்துக்குடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வந்தது மக்களிடையே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பண்பாடு கலாசாரத்தை மிகவும் அதிகமாக நேசிக்கக் கூடியவர் அவர். பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு அதிக முறை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தினசரி தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. மேலும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சாரத்தைத் தொட்டால் தான் சாக் அடிக்கும் ஆனால் இப்போது மின் கட்டண ரசீதைப் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது” என்று விமர்சித்தார்.
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு ஆரியத்தைத் திணிக்க முயல்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “முதல்வர் ஸ்டாலின் முதலில் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி, மேலடி விட்டுவிட்டு நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

நான்கு லட்சம் வட மாநில தொழிலாளர்கள் தமிழக வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே என்ற கேள்விக்கு, “தமிழக மக்களை திமுக நம்பாமல்தான் வட மாநில தொழிலாளர்களை வாக்காளர்களாகச் சேர்த்துள்ளது. இருந்தும் திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்” எனத் தெரிவித்தார்.