
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த நடிகராக பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், விக்ராந்த மெஸ்ஸி, சிறந்த நடிகை ராணி முகர்ஜி, சிறந்த துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், மலையாள நடிகர் விஜயராகவன். சிறந்த துணை நடிகை ஊர்வசி என அந்தப் பட்டியல் நீள்கிறது.
ஏற்கெனவே, சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவு என இரண்டு விருதுக்கு தி கேரளா ஸ்டோரி தேர்வு செய்யப்பட்டது. கேரள ரசிகர்களிடமும், கேரள அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை ஊர்வசி தேசிய திரைப்பட விருது குழுவை சாரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “என்னை விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால் எந்த அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான விருது, விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது? விஜயராகவன் துணை நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகர் என்றால் இந்த நடிப்பை அவர்கள் எவ்வாறு மதிப்பிட்டார்கள்? எந்த அடிப்படையில் ஒப்பிட்டு மதிப்பிடப்பட்டது?
விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும், ஷாருக்கானை சிறந்த நடிகராகவும் ஆக்கியது எது? சிறந்த நடிகர்கள் இருவர், சிறந்த துணை நடிகர்கள் இருவர். ஆனால், சிறந்த நடிகையாக ஒருவரையும், சிறந்த துணை நடிகையாக ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். ஏன் நடிகைகளுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை.

நாங்களும் வரி செலுத்துகிறோம், மற்றவர்களைப் போலவே எங்கள் வேலைகளைச் செய்கிறோம். நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விருது தேர்வுக் குழு பதிலளிக்க வேண்டும். கிடைப்பதை வாங்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதற்கு இது ஒன்றும் ஓய்வூதியமல்ல. இது எங்கள் வேலைக்கான அங்கிகாரம். மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தலையிட்டு, இது தொடர்பாக கேள்வி கேட்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…