
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு, அம்மாநிலத்தின் கடற்கரை நகரமான திகாவில், 22 ஏக்கர் பரப்பளவில், ரூ.250 கோடி செலவில் பிரமாண்டமான ஜெகநாதர் கோயிலைக் கட்டிமுடித்தது.
மேற்கு வங்க வீட்டுவசதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் (HIDCO) கட்டப்பட்ட இந்தக் கோயில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது.
`மம்தா பானர்ஜி இந்தக் கோயிலை அரசியல் ஆதாயங்களுக்காக, குறிப்பாக இந்து வாக்காளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் கட்டியிருக்கிறார்’ என பா.ஜ.க உள்ளிட்ட மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “கோயில்களுக்கு துர்கா பூஜைக்காக ரூ.1.1 லட்சம் அரசு மானியம் வழங்கப்படும்” என அறிவித்தார். இந்த அறிவிப்புக்கும் பா.ஜ.க கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக மேற்கு வங்க மாநில பா.ஜ.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அக்னிமித்ரா பால், “திரிணாமுல் காங்கிரஸ் அரசு வளர்ச்சிப் பணிகளைப் புறக்கணித்து, பொது நிதியை நன்கொடையாக விநியோகிக்கிறது. கோயில்களைக் கட்டுவதும், மத விழாக்களுக்கு மானியங்களை வழங்குவதும் ஒரு அரசின் முதன்மை நோக்கமாக இருக்கக்கூடாது.
இதுபோன்ற நடவடிக்கைகள், அரசு தனது முன்னுரிமைகளை மாற்றுவதைக் காட்டுகிறது. சாலைகளை அமைப்பதற்கும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பதிலாக, மம்தா பானர்ஜி மத அரசியலில் மும்முரமாக ஈடுபடுகிறார்.
இந்து வாக்குகளுக்காக ஜெகன்னாதர் கோயிலைக் கட்டி முடித்திருக்கிறார். இதை உதாரணமாகக் காட்டி, மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட வேண்டும் என்று கோரக்கூடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…