
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவருமான ஷிபு சோரன் (81) சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார்.
அவரது மகனும் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், “மதிப்பிற்குரிய குரு டிஷோம் நம் அனைவரையும் விட்டுச் சென்றுவிட்டார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 38 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவராக இருந்த ஷிபு சோரன், கட்சியின் நிறுவன புரவலராக அங்கீகரிக்கப்பட்டவர்.
1969-ல் சந்தால் இனப் பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து உருவான `சொனாட் சந்தால் சமாஜ்’ என்ற அமைப்பின் நிறுவினர் இந்த ஷிபு சோரன். ஜார்க்கண்ட் பழங்குடிகளிடையே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்திவந்த சிவ மாதோ, முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.ராய் ஆகியோருடன் பினோத் பிகாரி மஹ்தோ ஆகியோருடன் கைகோத்தார்த்து உருவானதே ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா’ எனும் அரசியல் கூட்டணிக் கட்சி.
1972-ம் ஆண்டு, நவம்பர் மாதம் கட்சி அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியது. ‘ஜார்க்கண்ட்’ தனிமாநிலக் கோரிக்கையை முன்வைத்து அரசியல் களம் கண்டவர், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் ஆதரவைத் திரட்டி ஜே.எம்.எம்-ன் அரசியல் தளத்தை விரிவுபடுத்தினார். 1980 ‘டும்கா’ மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி-யாக பதவியேற்றார்.
1984-ல் ஜே.எம்.எம் கட்சியின் தனித்துவ அடையாளமாக உருவான சிபு சோரன், 1987-ல் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் தன்வசப்படுத்தினார்.
ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸின் ஆதரவோடு ஜார்க்கண்டை தனிமாநிலமாக்கும், ‘பீகார் அமைப்பு மசோதா’ நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2000-ம் ஆண்டு, மார்ச் மாதம் 25-ம் தேதி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் அன்று தெற்கு பீகாரின் ஜார்க்கண்ட் பகுதி தனிமாநிலமாக உருவானது. ஜார்கண்ட் தனிமாநிலமாக உருவானதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.