• August 4, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துபாண்டி – பொன்னழகு, தம்பதியருக்கு 1 பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், தாய் பொன்னழகு விறகு வெட்டி 3 குழந்தைகளையும் வளர்த்து வருகின்றார்.

இவர்களது தாத்தா, பாட்டி ஆடு மேய்க்கும் தொழிலிலும், தாய் பொன்னழகு விறகு வெட்டும் வேலையும் செய்து அன்றாட பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

பூமாரி

வறுமையிலும் மூன்று பிள்ளைகளையும் அரசு பள்ளியில் படிக்க வைத்து வந்துள்ளார். இவரது மகள் பூமாரி திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் 573 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு சிறு வயதிலிருந்து மருத்துவம் படிக்க ஆசையாக இருந்துள்ளது.

இந்த நிலையில் மாணவி பூமாரி, சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராகி வந்துள்ளார். இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, பல் மருத்துவம் படிக்க தேர்வானார். ஆனால் பல் மருத்துவம் படிக்க ஆர்வம் இல்லாததால் எம்.பி.பி.எஸ் படிக்க மிகுந்த ஆர்வம் இருந்ததால் மீண்டும் நீட் பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

பூமாரி

தற்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து 7.5% இட ஒதுக்கீட்டில், பூமாரிக்கு சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்து மருத்துவ கனவு நனவாகியுள்ளது.

இதனால் பூமாரி குடும்பம் மட்டுமல்லாது, புலிக்குறிச்சி கிராமமே பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. தங்களது கிராமத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேர இருக்கும் மகிழ்ச்சியில் பூமாரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி பூமாரி கூறும் போது, “எனது தந்தை உயிரிழந்த நிலையில் எனது அம்மா விறகு வெட்டும் வேலை செய்து வருகின்றனர். நாங்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு ஏற்கனவே பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் எனக்கு எம்பிபிஎஸ் படிக்க ஆசை இருந்ததால் நான் பல் மருத்துவம் படிக்க விரும்பவில்லை. மீண்டும் முயற்சி செய்து படித்தேன் தற்போது எனக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைத்துள்ளது. நீட் என்பது ஒரு கஷ்டமானது இல்லை நம்மளுடைய முயற்சி கண்டிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் நாம் ‘பாசிட்டிவ் திங்கிங்’ உடன் இருக்க வேண்டும். நாம் எம்பிபிஎஸ் ஆக வேண்டும் என்று லட்சியம் இருந்ததால் கண்டிப்பாக சாதனை படைக்கலாம்.

NEET

நான் தான் எங்கள் ஊரில் முதல் எம்.பி.பி.எஸ் அது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. என்னை போன்று நீட் தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு நான் ஆலோசனையும் வழங்கி அவர்களையும் என்னை போன்ற மருத்துவர்களாக உருவாக்க பாடுபடுவேன். மேலும் எனது மருத்துவ படிப்பை முடித்து கிராமப்புற மருத்துவ மேம்பாட்டுக்காக பணியாற்றுவேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், “எனது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் எனது மருத்துவ படிப்பிற்கு உதவி செய்தால் எனது படிப்பை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவியாக இருக்கும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *