
சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், நடிகர் மற்றும் எம்.பி கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஒளிபரப்பப்பட்ட காணொளியில், “அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.
அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், “கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்” என்று உறுதிமொழி ஏற்றனர்.
ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பின்னர், மேடையில் பேசிய கமல்ஹாசன், “கல்வியும் அன்பும் ஒருங்கே கிடைப்பதில்லை. அது, அம்மாவிடம் கிடைக்கும். அகரத்திடம் கிடைக்கும்.
சினிமா வானில் நட்சத்திரமாக இருப்பதற்கு கொடுக்கப்படும் கிரீடம் வேறு.
ஆனால் இந்த சமூக வானில் இந்த மாதிரி நற்பணிகள் செய்வதற்கு முள்கிரீடம் தான் கிடைக்கும்.
பரவாயில்லை எனக்கு அந்த கிரீடம் போதும் என்று சொல்வதற்கு மனோபலம் வேண்டும். ஏனென்றால் கூட யாரும் நிற்க மாட்டார்கள்.

சினிமாக்காரர்கள் என்பதைத் தாண்டி சமூகத்தில் பெரியவர்கள் பட்டியலில் சேர்வதற்கு நானும் 21 வயதில் ஆசைப்பட்டேன்.
இவரும் (சூர்யா) இளமையிலேயே ஆசைப்பட்டு விட்டார்.
நாங்கள் செய்வது பல மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு அற்புதமான கலைத்துறை. ஆனால், அது வியாபாரத்துறையும் கூட.
லாபத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். எனக்கு அதுதான் சோறு போடுகிறது. அதுதான் எனக்கு நற்பணி இயக்கத்தையும் நடத்துகிறது.
அன்பும் கல்வியும் போதுமானது. அந்த ஆயுதத்தை வைத்து உலகத்தை வெல்லலாம்.” என்று கூறினார்.