
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மதன் பாப் (71), நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
மதன் பாப் மரணத்துக்குத் திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் தமிழ் மகன், மதன் பாப் உடன் ஏற்பட்ட நட்பு குறித்து விவரித்திருக்கிறார். “பாலச்சந்தர் இயக்கிய ஜாதிமல்லி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மதன் பாப் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் என்னுடைய நண்பர் தாமுவும் நடித்திருந்தார். அதனால் அந்த திரைப்பட நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது தாமுதான் மதன் பாபை அறிமுகம் செய்து வைத்தார்.
நட்பு தொடங்கியது
அதற்கு முன்னதாகவே மதன் பாபை சில இசை நிகழ்ச்சிகளில் பார்த்துள்ளேன். அதன் பிறகு அவரைப் பார்த்து ‘உங்களை நிறைய கவனிக்கிறேன் சார். நீங்கள் உங்கள் துறையில் நன்றாக செயல்படுகிறீர்கள்’ என்றெல்லாம் பாராட்டும் பொழுது எங்களுக்குள் நட்பு தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு, சூட்டிங் ஸ்பாட்க்கு சென்றெல்லாம் பேசியிருக்கிறேன். 15 வருடங்களுக்கு மேலாக நான் சினிமா நிருபராக இருந்ததால் நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம். மாலை 5 – 6 மணியளவில் அவர் வீட்டிற்கு சென்று விட்டால், இரவு 11 மணி வரை நாங்கள் பேசியிருக்கிறோம். அவருடைய மனைவி உற்சாகமாக சமைப்பார்.
அவருக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உண்டு. அவர்கள் இருவரும் நல்ல பாடகர்கள். சினிமாவிலும் பாடல் பாடியிருக்கிறார்கள். ஆனால் இன்னும் பெரியளவில் தமிழ் சினிமாவில் அவர்கள் வந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நல்லதொரு இசை குடும்பம் அவருடையது.
மதன் பாப் அவர்களும் கிட்டார் நன்றாக வாசிப்பார். நிறைய இசை கருவிகளை வாசிக்கக் கூடியவர். நிறைய பாடுவார். நிறைய வாசிப்பார். சுஜாதாவின் பலக் கதைகள் அவருக்கு அத்துப்படி. என்னுடைய நூல் வெளியீட்டு விழாவில் மெட்ராஸ் நினைவுகள் என்றத் தலைப்பில் பேசினார்.

அவர் பார்த்த சென்னையை அற்புதமாக பேசினார். 32 வருடங்களாக என்னுடன் நட்பாக பழகியவர். அவரை எப்போதும் மரியாதையுடன் ‘மதன் சார்’ என்று தான் அழைப்பேன். சில நேரங்களில் மதர் சார் என்றும் அழைப்பேன். அதை எல்லா இடங்களிலும் பேசுவார். ஒருமுறை விகடனில் சினிமா நட்சத்திரங்களை அழைத்து பேட்டி எடுத்தபோது கூட அதனை குறிப்பிட்டு பேசினார். அந்த அளவிற்கு உயர்ந்த இடத்தில் இருப்பவர். இடையில் சில ஆண்டுகள் எங்களுக்குள் தொடர்பில்லாமல் இருந்தது.
அண்ணனையும், ஒரு நல்ல நட்பையும் இழந்தது போல் இருக்கிறது
அவருக்கு உடல்நிலை சரியில்லாமல், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு, நான் அவரை என்னுடைய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு வரவழைத்தேன். அப்போதே அவர் படி ஏற முடியாமல், என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறினார். அதில் ஒரு நிகழ்ச்சியில்தான் அவர் ஏன் உடல் மெலிந்திருக்கிறார் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பேசினார்.

அவருக்கு புற்றுநோய் உள்ளது என்பதை அந்த நிகழ்வில் தான் முதன்முதலில் பொதுவெளியில் எல்லோருக்கும் தெரியும். அந்த புத்தகத்தை கூட அவரால் அப்போது படிக்க முடியவில்லை. அந்த நிகழ்வில் என்னைப் பற்றி மட்டுமே பேசினார். அப்படிப்பட்ட உயர்ந்த நட்பை இழந்திருக்கிறேன். அவருடைய இழப்பு ஒரு அண்ணனையும், ஒரு நல்ல நட்பையும் இழந்தது போல் இருக்கிறது.” என உருக்கமாகப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…