
மக்களின் மனதில் ஓர் உயர்ந்த இடத்தில் இருந்த, இருக்கிற, எப்போதும் இருக்கவிருக்கிற ஒரு திரை நாயகியைப் பற்றித்தான் இந்த வாரம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் அம்மு என்கிற ஜெ.ஜெயலலிதா.
பிறந்தது மைசூரில். அப்பா ஜெயராம், அம்மா வேதவல்லி. ஜெயலலிதா அவர்களின் சொந்தப்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவுக்கு 2 வயதாகும்போதே அப்பா ஜெயராம் இறந்துவிட, குடும்ப பொறுப்பை அம்மா வேதவல்லி சுமக்க வேண்டிய நிலைமை.
ஏர்ஹோஸ்ட்டஸான இவருடைய தங்கை, நடிக்கவும் செய்திருக்கிறார். அவர் சென்னை வர, கூடவே தன் அக்காவையும் வரவழைத்திருக்கிறார். ஜெயலலிதாவின் சித்தியைப் பார்க்க வந்த திரையுலகத்தினரால், ஜெயலலிதாவின் அம்மாவுக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சந்தியா என்ற பெயரில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 10 வயது வரை அம்மாவைப்பெற்ற தாத்தா, பாட்டியுடன் பெங்களூருவில் வசித்து வந்த ஜெயலலிதா, அதன் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறார். பெங்களூருவில் பிஷப் காட்டன் பள்ளிக்கூடத்தில் படித்தவர், சென்னைக்கு வந்ததும் சர்ச் பார்க் பிரசன்ட்டேஷன் கான்வென்ட்டில் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார்.
எல்லா பாடங்களிலும் தொடர்ந்து முதலிடம், ஸ்போர்ட், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் என ஆல்ரவுண்டராக பள்ளியில் வலம் வந்துக்கொண்டிருந்த ஜெயலலிதா, அதே நேரம் பல கேலி, கிண்டல்களையும் சந்தித்திருக்கிறார்.
”என்னுடைய அம்மா அப்போது பல படங்களில் அம்மா, அக்கா, அண்ணி போன்ற துணைக் கதாபாத்திரங்களில் நடித்ததுதான் அதற்குக் காரணம். பள்ளிக்கூடத்தில் யாராவது கேலி, கிண்டல் செய்தால் வீட்டுக்குச் சென்று அழுவேன்” என்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் அம்மாவுக்கு மகளைப் புகழ்பெற்ற நடனக்கலைஞராக்கிவிட வேண்டுமென்கிற பெருங்கனவு இருந்திருக்கிறது. அதற்காக 4 வயதில் இருந்தே மகளை பரத நாட்டிய வகுப்புக்கு அனுப்பியிருக்கிறார். 12 வயதில் அரங்கேற்றமும் நடந்திருக்கிறது.
”அம்மாவுக்கு என்னை யாமினி கிருஷ்ணமூர்த்தி, பாலசரஸ்வதி, கமலா லஷ்மன் போல புகழ்பெற்ற நடனக்கலைஞராக்க வேண்டுமென ஆசை. ஆனால், எனக்கோ பல பேர் முன்னிலையில் ஸ்டேஜில் நடனமாட பிடிக்கவில்லை. ஆனால், அம்மாவுக்காக அதை நான் செய்தேன்” என்கிறார் ஜெயலலிதா.
1964-ல் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரிப்படிப்புக்கு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. படிப்புக்கான ஸ்காலர்ஷிப்பும் கிடைத்துவிட்டது.
கல்லூரிக்கனவில் மிதந்துகொண்டிருந்த ஜெயலலிதாவிடம், ‘மற்றவர்களுக்குத் தேடிப் போனாலும் கிடைக்காத சினிமா வாய்ப்பு உன்னைத் தேடி வந்திருக்கிறது’ என அவருடைய அம்மா சொல்லியிருக்கிறார். நடிப்பா, படிப்பா என மூன்று நாள்கள் வீட்டில் சண்டையும் அழுகையுமாக இருந்திருக்கிறது.

”எவ்வளவுதான் அம்மாவுடன் விவாதம் செய்தாலும், நான் அப்போது குழந்தைதானே. நாங்கள் ஒரு பணக்காரக் குடும்பம் என்றுதான் நான் அதுவரை நினைத்திருந்தேன். ஏனென்றால், அம்மா அவருடைய கடின உழைப்பால் அந்தளவுக்கு என்னையும் என் அண்ணனையும் வசதியாக வளர்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், சினிமா வாய்ப்பு வந்தபோதுதான், எங்களை வளர்க்க அம்மா படுகிற துன்பமெல்லாம் எனக்குப் புரிந்தது. அம்மா மீது பரிதாபம் வந்தது. அம்மாவின் பாரத்தைக் குறைக்க எனக்குக் கிடைத்த ஸ்கார்லர்ஷிப்பைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நடிப்பதற்குச் சம்மதம் சொன்னேன்.
நான் ரொம்பவும் கூச்ச சுபாவி. அறிமுகமில்லாத நபர்களைச் சந்திக்கும்போது பயமாக இருக்கும். எனக்குப் புகழ் வெளிச்சம் பிடிக்காது. அப்படிப்பட்ட நான்தான், சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். நாளொன்றுக்கு 6 ஷிஃப்ட் கூட நடித்திருக்கிறேன். படப்பிடிப்புக்காக ரயிலில் போகும்போது, என்னுடைய டான்ஸ் மாஸ்டரும் உடன் வருவார்.
ரயிலிலும் எனக்கு நடன வகுப்பு நடக்கும். அந்தக் காலகட்டத்தில் ‘படப்பிடிப்புக்கு விமானத்தில் செல்ல வேண்டும்’ எனக் கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறேன். அப்போதுதானே என்னால் ஓய்வெடுக்கவோ, தூங்கவோ முடியும்.

நடிக்க பிடிக்கவில்லைதான். நடிப்பை எங்கும் பயிலவில்லைதான். ஆனால், ஒருமுறை ஒரு விஷயத்தைச் செய்வது என முடிவெடுத்துவிட்டால், அதற்காக என் மொத்த உழைப்பையும் கொடுப்பேன். நடிப்பு அப்படித்தான் எனக்கு இயல்பாகவே வந்தது” என்கிறார் அம்மு.
ஜெயலலிதா தமிழில் நடித்த முதல் திரைப்படம் 1965-ல் ஶ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிற ஆடை.’ அதற்கு முன்னரே ‘சின்னத கொம்பே’ உள்ளிட்ட சில கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். இதே வருடம் எம்.ஜி.ஆருடன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிக்கிறார்.
இதன்பிறகு, கன்னித்தாய், மோட்டார் சுந்தரம் பிள்ளை, யார் நீ, குமரிப்பெண், சந்திரோதயம், தனிப்பிறவி, முகராசி, கெளரி கல்யாணம், மேஜர் சந்திரகாந்த், தாய்க்குத் தலைமகன், மகராசி, அரசக்கட்டளை, காவல்காரன், கந்தன் கருணை, ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோயில், கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், அடிமைப்பெண், எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள், சுமதி என் சுந்தரி, சூரியகாந்தி, அவன் தான் மனிதன்… என ஜெயலலிதா நடித்த தமிழ்ப்படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவற்றில் நாயகி ரோல்களும் உண்டு. மேஜர் சந்திரகாந்த், எங்கிருந்தோ வந்தாள், சூரியகாந்திபோல கதை நாயகி ரோல்களும் உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் தர்மேந்திராவுடன் Izzat என ஒரேயொரு படம் என 125 படங்கள்வரை நடித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்திருப்பதாகச் சொல்கிறார்.

”இந்தியில் நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் தமிழில், தெலுங்கில் நடித்த பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படும்போதெல்லாம், நாயகி வாய்ப்பு முதலில் எனக்கே வந்தது. ஆனால், அவற்றில் நடிப்பதற்கு என்னிடம் தேதி இருக்கவில்லை” என்கிறார்.
அவர் தன் கரியரின் உச்சியில் இருந்தபோது விகடன் பத்திரிகையாளர்களுடன் அவர் பேசியுள்ள பல விஷயங்கள், அவருடைய தனிப்பட்ட இயல்பை வெளிப்படுத்துகிறது.
”வழக்கமாக எல்லா குழந்தைகளுக்கும் ‘அம்மா’ என்று அழைக்க கற்றுத்தர வேண்டியதில்லை. ஆனால், நான் மட்டும் என் அம்மாவை, மழலையில் ‘அம்மு… அம்மு…’ என்று அழைத்தேனாம். அதனால், அனைவரும் என்னை அம்மு என்று கேலி செய்யத் தொடங்கி, அதுவே நாளடைவில் என் செல்லப்பெயராக மாறி விட்டது. திரை உலகில் ஜெயலலிதாவைவிட ‘அம்மு’ என்ற பேர்தான் கொடி கட்டிப் பறக்கிறது.”

”வெண்ணிற ஆடை வாய்ப்பு வருவதற்கு முன்னரே கல்லூரியில் ஃபீஸ் கட்டிவிட்டேன். அதனால், ஓர் அரை நாளாவது கல்லூரிக்குப் போக வேண்டுமென ஆசைப்பட்டு, கையில் நோட்டு, புத்தகம் எதுவுமில்லாமல் கல்லூரிக்குச் சென்றேன். விரிவுரையாளர் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், நான் என் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதற்காக, விரிவுரையாளர் என் மீது கோபம் கொண்டார். நான் கான்வென்ட்டில் படித்தபோது ஒரு நாள்கூட எந்த ஆசிரியரிடம் திட்டு வாங்கியதில்லை. என்னை யாரும் கோபித்துக் கொண்டதுமில்லை.”
”ஒரு ரசிகர் எனக்கு கடிதம் எழுதியிருந்தார். என் மீது உயிரையே வைத்திருப்பதாகவும், ஒரு தேதி குறிப்பிட்டு அதற்குள்நான் அவரைத் திருமணம் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது மாதிரி எழுதுவது வழக்கமாகையால் அதற்கு நான் எந்தவித பதிலும் எழுதவில்லை. அந்த ரசிகர் குறித்த தேதி கடந்து வி்ட்டது. மறுபடியும் அவரே ஒரு கடிதம் எழுதினார். இன்னொரு காலக்கெடு வைத்து, அந்தத் தேதிக்குள் மணந்து கொள்ளாவிட்டால் மரணத்தைக் கட்டியணைத்துக் கொள்வேன் என்று எழுதியிருந்தார். அதற்கும் நான் பதில் எழுதவில்லை.
வழக்கம் போல் தேதி குறிப்பிட்டு தற்கொலை. பயமுறுத்தல்களுடன் மூன்றாவது கடிதமும் வந்தது. அந்த ரசிகருக்கு நகைச்சுவையாக, ஆனால், சுருக்கமாக ஒரு பதில் அனுப்பினேன்.

”’எனக்கு கணவராக வரவேண்டியவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். மற்ற கொள்கைகளைவிட இதுதான் முக்கியம். சொன்ன வாக்னக மூன்று தடவை மாற்றிய உங்களை எப்படி நான் மணக்க முடியும்? மன்னிக்கவும்’ – அதற்குப் பின் அந்த நபர் கடிதம் எழுதவில்லை.”
”நானும் ஷீலாவும் நெருங்கிய தோழிகள். நாங்கள் பெரும்பாலும் சந்தித்துப் பேசுகிற இடம் எது தெரியுமா? சினிமா தியேட்டரில்தான். ஷீலா நடித்த ( Muthasi ) என்ற படத்தை இருவருமாகச் சேர்ந்து பார்ப்பதாக முடிவு செய்தோம். எனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவருக்குப் படப்பிடிப்பு இருக்கும் ; அவருக்கு இல்லாத நாட்களில் எனக்கு இருக்கும். கடைசியாக இருவருக்கும் ஒருநாள் ஓய்வு கிடைத்தது. டிக்கெட்டும் ரிசர்வ் செய்து விட்டோம்.
புறப்படுவதற்கு முன்தான் தெரிந்தது, நாங்கள் எந்தப் படத்தைப் பார்க்க விரும்பினோமோ அந்தப் படம் அதற்கு முன் தினத்தோடு நிறுத்தப்பட்டு, ஷீலா நடித்த வேறொரு படம் திரையிடப்பட்டிருக்கிறது என்று. இருவருமாக அப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம்.”

தன் தோழி அம்மு பற்றி நடிகை ஷீலா பேட்டியொன்றில், ”நாங்கள் ஒன்றாக சினிமாவுக்குப் போய்விட்டு, புஹாரியில் ஃபலூடா சாப்பிடுவோம். நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் வீடுக் கட்டினோம்.
என்னுடைய வீட்டில் நான் பெரிய வாட்டர் ஃபால்ஸ், லிஃப்ட் வைத்தேன். அம்மு தன்னுடைய வீட்டில் ஒரு பெரிய லைப்ரரி வைத்தார். அவர் எப்போதும் வாசித்துக்கொண்டே இருப்பார். அவரைப்போல அறிவாளிப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை” என்கிறார்.
ஜெயலலிதா நல்ல குரல் வளம் கொண்டவர். அடிமைப்பெண் படத்தில் ‘அம்மா என்றால் அன்பு’, சூரியகாந்தி படத்தில் ‘நான் என்றால் அது அவளும் நானும்’, ‘ஓ மேரே தில்ரூபா’ உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார். டென்னிஸும் குதிரையேற்றமும் இவருக்கு அத்துப்படி.
திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வந்துக்கொண்டிருந்தபோதே, பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார். நடிகை சிமி கேரவால் எடுத்த பேட்டியில்கூட, நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால், படிப்பு, ஆராய்ச்சி, நோபல் பரிசு என்று பெருளாதார நிபுணர் அமர்த்தியா சென் போல இருந்திருப்பேன் என்றிருக்கிறார்.
அம்மு என்கிற ஜெ.ஜெயலலிதா திரையுலகையும் ஆண்டவர்..!
(முற்றும்)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…