
நகைச்சுவை நடிகர் குமரி மாரிமுத்துவுக்குப் பிறகு சிரிப்பின் மூலம் மக்களிடம் பெரும் அங்கிகாரத்தைப் பெற்றவர் நடிகர் மதன்பாப். 71 வயதில் புற்றுநோயின் காரணமாக மரணமடைந்தார்.
இவரின் மறைவு ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இசைக்கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி நகைச்சுவை நடிகராக தன் வாழ்வை முடித்திருக்கிறார் மதன்பாப்.
குடும்பம்:
வீட்டில் எட்டாவதாகப் பிறந்த மதன் பாப்-வுடைய இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவல்லிக்கேணி. அப்பா சுப்பிரமணியம், சுதந்திரப் போராட்ட வீரர்.
‘மதுரை மித்ரன்’ எனும் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தவர். திருவல்லிக்கேணி பகுதியில் நல்ல செல்வாக்குமிக்கவர். தலைவர் காமராஜருடைய நெருங்கிய நண்பரும் கூட. அம்மா பொன்னம்மாள், கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர். பாடல் வகுப்புகளை எடுத்துவந்தார். மதன் பாப் படித்து வளர்ந்தது எல்லாம் திருவல்லிக்கேணி.
பாக்ஸர் மதன் பாப்:
பார்த்தசாரதி கோயில், பைகிராஃப்ட்ஸ் ரோடு, பிரசிடென்சி காலேஜ், மெரினா பீச், ரத்னா கஃபே இதெல்லாம் மதன் பாப்-ன் இளமைக் காலத்தில் அன்றாடம் வாசம்செய்யும் இடங்கள். படித்துவிட்டு வேலை தேடிய நேரத்தில்தான், ஃபிட்னஸ்க்காக கோல் சண்டை, பானா, சூரி கத்தி, பாக்ஸிங் எனப் பல கலைகளை விரும்பி கற்றுக்கொண்டார்.
அந்தக் காலத்திலேயே ஹெவி வெயிட் பாக்ஸர். ‘சார்பட்டா பரம்பரை’யைச் சேர்ந்த இவர், அதைப்பற்றியெல்லாம் யாரிடமும் பெரிதாகச் சொல்லிக்கொண்டதே இல்லை.

ஒருமுறை இயக்குநர் பா.ரஞ்சித்திடம், தான் பாக்ஸர் என்பதைப் பகிர்ந்துகொண்டபோது, பா.ரஞ்சித் ஆச்சரியமாகி, “தெரிஞ்சிருந்தா, சார்பட்டா பரம்பரையில உங்களையும் நடிக்க வச்சிருப்பேனே” என வருத்தப்பட்டாராம். ‘சார்பட்டா’ படத்தில் பார்த்த ‘கோச்’கள் எல்லோருமே மதன் பாப்-புடன் இருந்தவர்கள்தான்.
அதே காலகட்டத்தில் கிடார் வாசிக்கவும், மிருதங்கம் வாசிக்கவும் கற்றுக்கொண்ட மதன் பாப், ‘ஒரு விஷயத்தைப் புதுசா கத்துக்கறது வாழ்க்கையில ரொம்ப சிறந்த விஷயம்’ எனப் பலமுறை பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார்.
முதல் கிடார்:
இவருடைய முதல் கிடார் இவருடைய அம்மா அண்டை வீட்டார்களிடம் கடன் வாங்கி, வாங்கிக் கொடுத்தது. வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட பெரிய வாழ்க்கைப் போராட்டமே நடத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில், மதன் பாப்-விடம் கிடார் கற்றுக்கொள்ள வந்த சிறுவர்களிடம் மாதம் ரூ.5 கட்டணமாக வசூலித்திருக்கிறார். இந்த வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையும், அதன் மூலம் பலரின் அறிமுகமும் நாளுக்கு நாள் வளர்ந்தது.
இவருடைய மாமா பெயரும் கிருஷ்ண மூர்த்தி என்பதால் வீட்டில் இவரை எல்லாரும் மதன் என்றே அழைப்பார்களாம். இவருடைய தம்பி பாபு டிரம்ஸ் வாசிப்பாராம். அதனால், அண்ணனும் தம்பியும் சேர்ந்து மதன் & பாபு மியூசிக் ட்ரூப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த அடையாளமே காலப்போக்கில் மதன் பாபு என்ற இவரின் பெயரின் அடையாளமாக மாறிவிட்டது.

1975-ல் தூர்தர்ஷன் முதல் முறையாகத் தொடங்கியபோது ஜனாதிபதி உரைக்குப் பின்னால் ஒலித்த இசை மதன் பாபு வாசித்த கிடார் இசைதானாம். இசைக் கலைஞராக தூர்தர்ஷன், மேடை நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் எனத் தான் விரும்பிய இசைத் துறையில் ஒரு வலம் வந்திருக்கிறார்.
மதன் பாப் ட்ரூப்
மதன் பாப்-வின் மியூசிக் ட்ரூப்பில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கீ போர்ட் வாசித்திருக்கிறார். இதை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம், `சிரிச்சிக்கிட்டே இருக்காரே மதன் பாபு சார் அவர்தான் என் குரு’ என ஏ.ஆர் ரஹ்மானே கூறியிருக்கிறார். ஆனால், ‘ஏ.ஆர்.ரஹ்மான் என் ட்ரூப்ல கீபோர்டு வாசிச்சது என் பாக்கியம்’ எனப் பெருமைப்படும் மதன் பாப், எந்த மேடையிலும் `ஏ.ஆர்.ரஹ்மான் என் சிஷ்யர்’ என்று கூறியதே இல்லை.
மதன் & பாபு ட்ரூப்-காக இசையமைப்பாளர் இளையராஜாவும், கங்கை அமரனும் வாசித்திருக்கிறார்களாம். மதன் பாப்-க்கு இசையின் மேல் இருந்த ஆர்வத்தால், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் பணியாற்றியிருக்கிறார்.

தன்னுடன் இசைக் கச்சேரியில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த சுசிலா என்ற பெண்ணையே காதலித்து, இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, திருத்தணியில் திருமணமும் செய்திருக்கிறார். இவருடைய மகன்,மகள் இரண்டு பேருமே இமான், ஸ்ரீகாந்த் தேவா இசையில் சினிமாவில் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.
நடிப்பு வாழ்க்கை:
இவருடைய தனித்துவமான சிரிப்பு, முகபாவனையைப் பார்த்த இயக்குநர் சிகரம் பாலச்சந்தர், 1992-ல் வெளியான ‘வானமே எல்லை’ படத்தில் காமெடி நடிகராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அப்போது தொடங்கிய இவருடைய நடிப்பு வாழ்க்கை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200-க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு வழிவகுத்தது.

தொடர்ந்து சினிமாவில் இயங்கிக்கொண்டிருந்த மதன் பாப், சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்த போவது யாரு’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவராகப் பங்கேற்றார். இதன் மூலம் சின்னத்திரையிலும் தன் சிரிப்பைப் பதித்தார்.
தனக்குப் புற்றுநோய் இருக்கிறது என யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத மதன் பாப், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருப்பாராம். இனி எப்போ மதன் பாப் என்ற கலைஞரின் பெயர் சொல்லப்பட்டாலும், ரசிகர்களின் மனதில் அந்தச் சிரிப்புக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…