
Doctor Vikatan: ஒருவருக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடிக்க, சாப்பாட்டுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகும் செய்யப்படுகிற ரத்தப் பரிசோதனைகள் போதுமானவையாக இருக்காதா…. பிறகு ஏன், ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ளும் HbA1c டெஸ்ட்டை எடுக்கச் சொல்கிறீர்கள்… ஹெச்பிஏ1சி டெஸ்ட் என்பது அவ்வளவு முக்கியமானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவர் சண்முகம்.
சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதில் மிக முக்கியமான டெஸ்ட் ஹெச்பிஏ1சி ( HbA1c ) என்பது. நம் ரத்தத்தில் சர்க்கரையானது எந்த அளவுக்குப் படிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட் இது. அதாவது ஹீமோகுளோபினில் சர்க்கரை எவ்வளவு படிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட். இப்படி சர்க்கரை படிவதற்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகும். அதனால்தான் இதை 3 மாதங்களுக்கொரு முறை செய்து பார்க்கிறோம்.
ஹெச்பிஏ1சி அளவானது 5.6 என்ற அளவில் இருப்பதுதான் நார்மல். 6.5-க்கு மேல் போனால் நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படும். 40 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்து நீரிழிவு உறுதிசெய்யப்பட்டால், அவர்கள், ஹெச்பிஏ1சி அளவை 6.5 என்ற அளவிலேயே கட்டுப்பாடாக வைத்துக்கொண்டால், பின்னாளில் பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும். அதுவே 60 வயதுக்கு மேலானவர்கள், இதய பாதிப்பும் இருக்கிறது என்றால், ஹெச்பிஏ1சி அளவை 7-க்கு மேல் போகாமல் வைத்துக்கொள்ளலாம். 70 ப்ளஸ் வயதினர் என்றால், அவர்களுக்கு வாழ்நாளை விட, வாழும் நாள்களின் தரமே முக்கியம் என்பதால், 7.5 என்ற அளவில் வைத்துக்கொண்டாலே போதுமானது. எனவே, ஹெச்பிஏ1சி (HbA1c) டெஸ்ட்டானது சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமன்றி, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மிக முக்கியமானது.

ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் பாதித்து சிலர், எமர்ஜென்சியாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படுவதுண்டு. அந்நிலையில அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமிருப்பது தெரியவரலாம். அவர்களுக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, மருத்துவமனையில் அட்மிட் ஆனநிலையில் அது அதிகரித்திருக்கிறதா அல்லது ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் காரணமாக எகிறியிருக்கிறதா என்பதை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் தெரிந்துகொள்ளலாம்.
அதாவது, ஹெச்பிஏ1சியில் அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, கண்டுபிடிக்காமல் விட்டிருக்கிறார் என தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் நார்மலாக இருந்தால், தற்போதைய மருத்துவநிலை, அதன் ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகரித்திருப்பதாகப் புரிந்துகொள்ளலாம்.
ஹெச்பிஏ1சி என்பது 24 மணி நேரமும் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு எப்படியிருக்கிறது என்பதைக் கண்காணிக்கும். சிலர், மருத்துவரைப் பார்க்க வேண்டிய தேதிக்கு ஒரு வாரம், பத்து நாள்கள் முன்பிலிருந்து உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கட்டுப்பாடாக இருப்பார்கள். அந்நிலையில் அவர்களுடைய ஃபாஸ்டிங், பிபி டெஸ்ட்டுகளை மட்டும் நம்பாமல், ஹெச்பிஏ1சி டெஸ்ட் செய்யும்போது அவர்களது உண்மையான நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும்.

சிலருக்கு ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இருக்கும். ஃபாஸ்ட்டிங், பிபியில் அதிகமாக காட்டும். அன்றைய தினம் அவர்கள் இனிப்பு சாப்பிட்டிருக்கலாம் அல்லது திடீரென ஏதாவது இன்ஃபெக்ஷன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரித்திருக்கலாம். எனவே, ஹெச்பிஏ1சி அளவை வைத்து எது சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.