
தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் மதன் பாப் (71). நேற்றைய தினம் (ஆகஸ்ட் 2) சென்னை அடையாற்றில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார்.
மதன் பாப் மரணத்துக்குத் திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைக்கலைஞர் டி.ராஜேந்தர், “அவர் சிரிப்போ டாப்போ டாப், மக்கள் மனங்களை மகிழ வைப்பதே என் ஜாப் என்று வாழ்ந்தவர்தான் மதன் பாப்.
நம் சிந்தை எல்லாம் மணக்கச் சிரித்தவர். பார்ப்போர் மனதை எல்லாம் பூ போலப் பறித்தவர். ‘சொன்னால்தான் காதலா?’, ‘காதல் அழிவதில்லை’ போன்ற என் படங்களில் நடித்தவர். என் இதயத்தில் நீங்காத இடம் பிடித்தவர். அன்பான நண்பர், பண்பான மனிதர், இனிமை பொங்கும் இசைக்கலைஞர்.
எதார்த்தமான நடிகர், எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்து சின்ன திரையிலும் வண்ணத்திரையிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தவர். தமிழ்த் திரை உலகத்திலே ஒரு தனி இடம் பிடித்தவர்.
அப்படிப்பட்ட மதன் பாப் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் மனதை வந்து வாட்டியது. நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைத்த வரை நோய் வந்து ஏன் தாக்கியது? மரணம் வந்து அவரை ஏன் துரிதமாய் தூண்டில் போட்டுத் தூக்கியது?
நெஞ்சம் தாங்கவில்லை, தூக்கம் நீங்கவில்லை, அவரை இழந்து வாடக்கூடிய கலை உலகத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும். அவரது இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று டி. ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…