
பாலிவுட்டில் நகைச்சுவை நடிகர் என்றால் அனைவரும் கைகாட்டுவது ஜானிலிவராகத்தான் இருக்கும். ஜானிலிவர் ஏராளமான இந்தி படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
ஜானிலிவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தனது மதுப் பழக்கத்தால் தனது உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் இருக்கும் ஜானிலிவர் தனது சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். தனது 17 வயதில் சினிமாவில் அறிமுகமான ஜானிலிவர் 6 ஆண்டுகளில் பிரபலம் அடைந்தார்.
சினிமாவில் நடித்ததோடு மட்டுமல்லாது காமெடி ஷோக்களையும் உலகம் முழுவதும் நடத்தினார். அவர் தனது மகளுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில்,” சினிமாவில் நான் பெற்ற வெற்றியானது எனது உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறையை மோசமாகப் பாதித்தது. பகல் முழுவதும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வேன். இரவில் காமெடி ஷோக்களில் பங்கேற்பேன். இது முடிந்த பிறகு அதிக அளவில் மது அருந்துவேன்.
இதனால் எனது உடல் மிகவும் சோர்வடைந்தது. இதனால் சிவசேனா கூட்டங்களில் மேடையில் பின்புறம் அமர்ந்து கொள்வேன். வீட்டில் மது அருந்தும் போது எனது மனைவி கோபத்தில் என்னிடம் மது குடிப்பதை நிறுத்த சொல்லிச் சண்டையிடுவார். நான் மது அருந்தியதால் எனது மனைவி கோபம் அடைந்திருக்கிறார். எனது குழந்தைகள் மனம் வருந்தியிருக்கிறார்கள். எனது பெற்றோர் கவலைப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஒப்புக்கொண்ட எந்த வேலையையும் செய்யாமல் விட்டதில்லை. மக்கள் அளவோடு மது அருந்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் அனைத்து அளவுகளையும் மீறிவிட்டேன். இது நல்லதல்ல.
நான் ஒரு குடிகாரன். நான் இரவு நேரங்களில் மும்பை செளபாட்டி கடற்கரையில் அமர்ந்து மது அருந்துவேன். அதிகமான நேரங்களில் அதிகாலை 4 மணி வரை கடற்கரையில் அமர்ந்து மது அருந்தியிருக்கிறேன். அந்நேரங்களில் போலீஸார் வருவதுண்டு.
என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார்கள். என்னிடம் பாதுகாப்பு காரணங்களுக்காக காரில் அமர்ந்து மது அருந்தும்படி கேட்டுக்கொள்வார்கள்.
வெற்றி சில நேரம் மனதைச் சஞ்சலமடைய செய்யும். ஒரு நேரத்தில் நான் இல்லாமல் எந்தப் படமும் இல்லை என்ற நிலை இருந்தது. அப்போதும் சர்வதேச அளவில் காமெடி ஷோக்களையும் நடத்திக்கொண்டிருந்தேன். ஆனால் மதுவால் அனைத்தையும் இழந்தேன்.
அதன் பிறகுதான் மதுவை நிறுத்துவது என்று முடிவு செய்தேன். கடந்த 24 ஆண்டுகளாக மதுவை ஒருபோதும் தொட்டது கிடையாது. மது அருந்திக்கொண்டிருந்தபோது ஒரு போதும் மது போதையில் எந்தவித நிகழ்ச்சியையும் நடத்தியது கிடையாது. அதே போன்று எந்த வித ஷோவிற்கு முன்பாக மது அருந்தியதும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…