
சென்னையின் புழல் சிறையிலிருந்து சேலம் நீதிமன்றத்துக்குக் கணக்கு (உதயா) என்கிற விசாரணைக் கைதியை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்கின்றனர். அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் போலீஸ் ‘எஸ்கார்ட்’களில் ஒருவராக உடன் பயணிக்கிறார் வேந்தன் (அஜ்மல்). ஆனால், சேலத்தைச் சென்றடையும் வழி நெடுக, கணக்கைக் கொலை செய்ய ஒரு கூலிப்படை சளைக்காமல் துரத்தி வந்து தாக்குகிறது. இன்னொரு பக்கம், போலி என்கவுன்டர் மூலம் கணக்கின் கதையை முடிக்கச் சில போலீஸ் அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். போட்டிப் போட்டு இவர்கள் ஏன் கணக்கைக் கொல்ல நினைக்கிறார்கள்? ‘எஸ்கார்ட்’ மாறனால் கணக்கைக் காப்பாற்ற முடிந்ததா என்பது கதை.
ஒரு கொலை விசாரணைக் கைதியின் கடந்த காலத்தை, துண்டாடப் பட்ட பிளாஷ் – பேக்குகள் வழியாகச் சொல்லும் திரைக்கதை உத்தி ஈர்க்கிறது. கணக்கின் காதல் வாழ்க்கையைச் சிறிது சிறிதாகத் தெரிந்துகொண்டு, அவனைப் பாதுகாக்கத் தொடங்கும் வேந்தனுக்கும் கணக்குக்கும் இடையில் அன்பும் அக்கறையும் பூக்கும் தருணங்களை நன்றாகவே சித்தரித்திருக்கிறார்கள். பேருந்துக்குள் நடக்கும் சண்டை, அது கவிழ்ந்து விழும் காட்சி ஆகியவற்றைப் பிரம்மாண்டமாகவும் நம்பும்படியாகவும் படமாக்கியிருக்கிறார் ஸ்டன்ட் சில்வா.