
71-வது தேசிய திரைப்பட விருதுகளில், ‘பார்க்கிங்’ படத்துக்கு 3 தேசிய விருதுகளும், ‘வாத்தி’ படத்தின் சிறந்த பாடல்களுக்கான இசைக்காக ஜி.வி.பிரகாஷுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்காக பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
‘வாத்தி’ படத்தில் நாயகனாக நடித்தவர் தனுஷ். மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “71-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘வாத்தி’ படத்திற்காக இரண்டாவது தேசிய விருதை வென்றுள்ள எனது சகோதரர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒரு சிறப்புப் பாராட்டு. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், அவரிடமிருந்து இன்னும் சிறந்தவை வரவில்லை என்பது எனக்குத் தெரியும். அவருடன் இணைந்து பணிபுரிய உள்ள படங்களுக்காக உற்சாகமாக காத்திருக்கிறேன்.
‘பார்க்கிங்’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கு தகுதியான அங்கீகாரம். அவர் ஒரு பெரிய திறமைசாலி. இறுதியில் அவருக்கு உண்மையிலேயே தகுதியான பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் நடித்து வரும் ‘இட்லி கடை’ மற்றும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் படம் ஆகியவற்றுக்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.