
சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும் செலுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – எட்டூர்வட்டம், சாலைப்புதூர் – மதுரை, நாங்குநேரி – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்கியதற்காக செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண பாக்கி 276 கோடி ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளதாகக் கூறி, சுங்கச்சாவடிகளை பராமரிக்கும் நான்கு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.