
பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா ஹசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா (2019 – 24 மக்களவை எம்.பி) போட்டியிட்ட சமயத்தில், பல்வேறு பெண்களுக்கு அவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தது தொடர்பான 2,500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பிரஜ்வல், முன்னாள் பிரதமரான தனது தாத்தா தேவகவுடா கூறிய பின்னர் மே 31-ம் தேதி நாடு திரும்பிய பிறகு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சுமார் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதேவேளையில், இன்ஸ்பெக்டர் ஷோபா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT), விசாரணையில் 123 ஆதாரங்களைச் சேகரித்து, கிட்டத்தட்ட 2,000 பக்கங்களைக் கொண்ட பெரிய குற்றப்பத்திரிகையைச் சமர்ப்பித்தது.
இதன் மீது கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் கடந்த ஏழு மாதங்களில் 23 சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது.

இத்தகைய சூழலில், விசாரணையின் முடிவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்து, தண்டனை அறிவிப்பை அடுத்த நாளுக்கு (ஆகஸ்ட் 2) ஒத்திவைத்தது.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், கே.ஆர். நகரைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்த குற்றத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதித்து, அந்தத் தொகை பாதிக்கப்பட்டவருக்குச் செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.