
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளைக் கண்டுபிடித்து கைது செய்து அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தி வருகிறது.
கொல்கத்தாவில் அதிக அளவில் போலி ஆவணங்களுடன் பங்களாதேஷ் பிரஜைகள் வசிக்கின்றனர். மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் பங்களாதேஷ் பிரஜைகள் தென்மாநிலங்களுக்குள் கூலி வேலைக்குச் சென்று விடுகின்றனர்.
சாந்தா பால் என்ற பெண் அது போன்று சட்டவிரோதமாக கொல்கத்தாவில் வசிப்பது தெரிய வந்தது. பங்களாதேஷைச் சேர்ந்த அவர் ஏர்லைன்ஸ் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதோடு மாடலாகவும், சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து போலி ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு பங்களாதேஷ் பாஸ்போர்ட்டில் இந்தியாவிற்கு வந்த சாந்தா பால் கொல்கத்தாவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
வீட்டு உரிமையாளரிடம்தான் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டதால் தனது குடும்பம் அதிருப்தியில் இருப்பதால் அவர்களிடமிருந்து விலகி இருக்க விரும்புவதாகத் தெரிவித்தார். வாடகை ஒப்பந்தம் கையெழுத்திடும்போது போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். அதோடு ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் மொகமத் அஸ்ரப் என்பவரைக் கடந்த ஜூன் மாதம் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
உள்ளூர் ஏஜெண்ட் ஒருவர் மூலம் போலியாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை எடுத்துள்ளார். அவரது கணவர் அஸ்ரப் கப்பலில் வேலை செய்கிறார். 2016ம் ஆண்டு அழகிப்போட்டியில் பங்களாதேஷ் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார். அதோடு 2019ம் ஆண்டு குளோபல் மிஸ் ஆசியா அழகிப்பட்டத்தையும் வென்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் மற்றும் பெங்காலிப் படங்களில் நடித்திருக்கிறார். அதோடு ஒடிசா படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங்கில் ஈடுபட்டிருந்தார். அதில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் பங்களாதேஷ் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாகவும் பணியாற்றி வந்தார்.