
திருச்சியில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிருக்கிறார்.
‘நலன் காக்கும் ஸ்டாலின்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டங்களில் முதலமைச்சரின் பெயர் மாற்றப்பட வேண்டுமென முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளது பற்றி பேசுகையில், “நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது அதைப் பற்றி நாம் சொல்ல முடியுமா… அவர்கள் மட்டும் எல்லாத் திட்டத்துக்கும் அம்மா, அம்மா எனப் பெயரிட்டனர். இப்போது எங்களைக் குறை கூறுகின்றனர்.” என்றார்.
ஓ பன்னீர்செல்வம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர்கள் (அதிமுக) திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் அவர்களிடம் செல்வார்கள் எனச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களிடமிருந்துதான் திமுகவுக்கு ஆட்கள் வருகிறார்கள். ஓபிஎஸ் வந்துகொண்டிருக்கிறார், எல்லோரும் வந்துகொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து யாரும் அங்கு செல்ல மாட்டார்கள்.” எனப் பேசினார்.

முன்னதாக ஓபிஎஸ், பிரேமலதா மு.க.ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணியில் கூட்டணி அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என திமுக அமைச்சர் துரைமுருகனிடம் கேட்கப்பட்டபோது, “பின்னணியும் இல்லை முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். அவ்வளவுதான்” என அவரது பாணியில் பதிலளித்தார்.
முன்னாள் முதலமைச்சர், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவரான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது முதல் அவர் எங்கே இணையப்போகிறார் என்ற கேள்வி தமிழ்நாடு அரசியல் களத்தில் சுழலத்தொடங்கியிருக்கிறது.