
அகமதாபாத்: பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு அகமதாபாத் போக்குவரத்துப் போலீஸ் நிதி உதவி அளித்துள்ள நிலையில், தங்கள் அனுமதியின்றி இவை ஒட்டப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்', 'நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள் – அங்கு நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கோ உள்ளாகலாம்', 'ஆண்கள் தங்கள் தோழியுடன் இருட்டான பகுதிக்கோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கோ செல்ல வேண்டாம் – அங்கு அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக நேரலாம்' போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் சோலா, சந்தேலோடியா பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. பின்னர், இந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.