
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்கி கிடப்பதாக தகவல் சொன்னார். போலீஸார் அங்குசென்று விசாரணை நடத்தியதில் அது மாதிரப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த அன்ஸில்(38) என தெரியவந்தது. போலீஸார் அவரது உறவினர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரவு அன்ஸில் மரணமடைந்தார். ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்லும் சமயத்தில் தனக்கு அதீனா ஜூஸில் விஷம் கலந்து குடிக்கக்கொடுத்ததாக உறவினரிடம் தெரிவித்துள்ளார் அன்ஸில். இதுகுறித்து மருத்துவமனையில் வைத்து டாக்டரிடமும் அன்ஸில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அஸீனாவை கைதுசெய்து, அவரது வீட்டில் ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். அதில் அஸீனா கொடுத்த ஜூஸில் களைக்கொல்லி விஷம் கலக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “கோதமங்கலம் மாதிரப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த அன்ஸில் ஜே.சி.பி, டிப்பர் போன்றவை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்தார். அவருக்கும் ஸப்னா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அன்ஸிலுக்கும் பிண்டிமன பகுதியைச் சேர்ந்த அதீனா(30)வுக்கும் நெருங்கிய நட்பு இருந்துவந்துள்ளது. அதீனா தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்குள் கடந்த சில 2 மாதங்களுக்கு முன்பு பிணக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அன்ஸில் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் அதீனா. அந்த வழக்கு 2 வாரங்களுக்கு முன்பு கோர்ட்டில் வைத்து சமரசமாக முடித்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அன்ஸிலை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் அதீனா. இரவு முழுவதும் அங்கு இருந்திருக்கிறார் அன்ஸில். ஆனால், அதிகாலையில் தனது வீட்டுக்கு வந்த அன்ஸில் விஷம் குடித்ததாக அதீனா கூறினார். அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருந்தன. கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர் மறைத்துவைக்கப்பட்டுள்ளது. அதீனாவின் வீட்டுக்கு அருகே உள்ள புதரில் அன்ஸிலின் மொபைல்போன் கண்டெடுக்கப்பட்டது. கோர்ட்டில் சமரசமாக முடித்துவைக்கப்பட்ட வழக்கில் கூறியபடி தனக்கு அன்ஸில் பணம் தராததால் கொலைசெய்ததாக அதீனா கூறியுள்ளார். இதுப்பினும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர். கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்து காதலனை கொலைசெய்த கிரீஷ்மா போன்று, ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து கொலைசெய்துள்ளார் அதீனா.