
கோவில்பட்டி: “மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுகதான். எங்களுக்கு துணை நிற்பது பாஜக” என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு 10.15 மணிக்கு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் கோவில்பட்டிக்கு வந்தார். தொடர்ந்து இன்று காலை அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தரிசனம், தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.