
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர்.வேல்ராஜ், 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இவரின் 3 ஆண்டு துணைவேந்தர் பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. எனினும், அவர் ஓய்வுபெறும் வயது நிறைவடையாததால் பேராசிரியராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். நேற்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதில் முறைகேடு மற்றும் சோலார் பேனல்கள் அமைத்ததில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது புகார்கள் உள்ளன. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் சிண்டிகேட் கூட்டத்தின் ஒப்புதலின்படி வேல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.