
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை “இறந்த பொருளாதரம்” என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார், அது எல்லோருக்குமே தெரிந்ததுதானே. பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் மட்டுமே இது தெரியாது…” எனப் பேசியிருந்தார்.
இந்தியா மீது 25% வரி விதித்த ட்ரம்ப், இந்தியாவும் ரஷ்யாவும் “தங்கள் இறந்த பொருளாதாரங்களை ஒன்றாக வீழ்த்த முடியும்” எனப் பேசியிருந்தார்.
மோடி அதைக் கொன்றுவிட்டார்!
ராகுல் காந்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துக்களை ஆமோதிப்பதைப் பலரும் விமர்சித்தனர். இதற்கு விளக்கமளிக்கும் வகையில், “இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது. மோடி அதைக் கொன்றுவிட்டார்” எனப் பதிவிட்டிருந்தார்.
அதற்கான 5 காரணங்களை முன்வைத்தார், “1. அதானி-மோடி கூட்டு
2. பணமதிப்பிழப்பு மற்றும் குறைபாடுள்ள ஜிஎஸ்டி
3. “அஸ்ஸெம்பல் இன் இந்தியா” தோல்வியடைந்தது
4. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிக்கப்பட்டன
5. விவசாயிகள் நசுக்கப்பட்டனர்.
இங்கே எந்த வேலையும் இல்லை. இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அழித்துவிட்டார்.” எனக் கூறியிருந்தார்.
சசி தரூர் பேசியதென்ன?
இந்தியாவை இறந்த பொருளாதாரம் என ட்ரம்ப் குறிப்பிட்டது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் சசி தரூரிடம் கேட்கப்பட்டபோது, “அது அப்படி இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும்” எனப் பதிலளித்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து, “வர்த்தக பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, வரிவிதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்கவில்லை என்றால் அது நமது ஏற்றுமதிகளைப் பாதிக்கும். அமெரிக்கா நமக்கு மிகப் பெரிய சந்தையாக உள்ளது.
அமெரிக்கா நம் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மீதான நமது வரி சராசரியாக 17%. இது காரணமில்லாமல் போடப்பட்டது அல்ல” எனக் கூறியுள்ளார்.