
மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான ‘மகாதேவி (மதுரி)’, அம்பானியின் ‘வந்தாரா’ உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது.
1992ம் ஆண்டு முதல் அந்த மடத்தில் வளர்க்கப்பட்டு, ஊர்வலம், கோவில் விழாக்களில் பங்கேற்பது என மகாதேவி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விலங்கு உரிமைகள் அமைப்பான ‘PETA’ அதிகமான சுமை, ஊர்வலங்களில் மூன்று நான்கு பேர் ஏறிக்கொண்டு போவது, பிச்சை எடுக்க வைப்பது என மாகதேவி யானையை துன்புறுத்துவதாகவும், அதன் கால்கள் பாதிக்கப்பட்டு நோய் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. மேலும், துன்புறுத்தலுக்கும், பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கும் மகாதேவி யானையை மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.
‘PETA’ போட்ட இந்த வழக்கு பல மாதங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே ‘மகாதேவி யானையை மீட்டு, மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறது.
இதையடுத்து ஆனந்த் அம்பானி நடத்தி வரும் ‘வந்தாரா’ உயிரியல் பூங்காவிற்கு மகாதேவி யானை மாற்றப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது மகாராஷ்டிரா ஜெயின் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயின் சமூகத்தினர், ‘யானையை துன்புறுத்தவில்லை. அது எங்கள் கோவிலில் அன்புடன் வளர்க்கப்பட்ட கோவில் யானை. அதை மீட்டெடுக்க வேண்டும்’ என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, ஆனந்த் அம்பானியின் ‘வந்தாரா’விற்கு மாற்றப்பட்டிருக்கும் மகாதேவி யானையை, அரசின் உயிரியல் விலங்கு மறுவாழ்வு பூங்காவிற்கு மாற்றவேண்டும் எனவும் வலுத்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதுதொடர்பாக 24 மணிநேரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்று, கோரிக்கைகளை பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பப் போவதாகக் கூறுகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருக்கும் ஜெயின் தலைவர்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் அரசிற்கு அழுத்தம் கொடுக்கவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனந்த் அம்பானியின் ‘வந்தாரா’ பூங்காவில் இருக்கும் மகாதேவி யானையை மீட்பதற்காக ‘ஜியோ’ சிம்களை, சாதனங்களை, பொருட்களை புறக்கணிக்கப் போவதாகவும் ‘Boycott Jio products’ என்ற போராட்டத்தையும் தீவிரமாக நடத்தப்போவதாகவும் ஜெயின் சமூகத்தினர் கூறுகின்றனர்.
மகாதேவி யானையை மீட்கும் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை தீவிர போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெடித்து நாடுமுழுவதும் இந்த விவகாரம் பேசுபொருளாக ஆரம்பித்திருக்கின்றது.