• August 1, 2025
  • NewsEditor
  • 0

ஹவாய் தீவில் உள்ள கொசுக்களை அழிக்க ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் விடப்படுகின்றன. கொசுக்களை அழிக்க கொசுக்களையே விடுகிறார்களா என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால் இது ஒரு பறவை இனங்களை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சியாகும்.

எதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்று இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

ஹவாய் தீவில் உள்ள ஹனிக்ரீப்பர் என்ற அரிய வகை பறவை இனங்கள் நெருக்கடியில் உள்ளன. முன்பொரு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட இனங்களாக இருந்த, இவை இன்று 17 வகைகள் மட்டுமே உள்ளன.

கொசுக்களை அழிக்க கொசுகள்

2023-இல் ‘அகிகிகி’ எனும் பறவை காட்டில் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற அழிவிற்கு முக்கிய காரணமாக இருப்பது பறவை காய்ச்சல் தான்.

இந்த பறவை காய்ச்சலை அங்குள்ள கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் இந்த பறவை இனத்தை கொசுக்கள் மூலம் பரவும் நோய் பாதிக்கிறது.

இதனை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா பறவை பாதுகாப்பு அமைப்பு ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஆய்வில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்களை இந்த தீவுகளில் டிரோன்கள் மூலம் விடப்படுகிறது.

இந்த கொசுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. ஆண் கொசுக்களிடம் இயற்கையாகவே உள்ள பாக்டீரியாக்கள் காட்டு பெண் கொசுக்களுடன் இணையும் போது முட்டைகள் உருவாகுவதை தடுக்கிறது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என்று இதனை செயல்படுத்தி வருகின்றனர்.

அழிவில் இருக்கும் பறவை இனங்கள்

பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வதாகவும், கொசுக்கள் மலைப்பகுதிகளை நோக்கி நகர்வதாகவும் அமெரிக்க பறவை பாதுகாப்பு அமைப்பின் ஹவாய் திட்ட இயக்குநர் டாக்டர் கிறிஸ் ஃபார்மர் தெரிவித்திருக்கிறார். மேலும் ”வெப்பநிலை உயர உயர, கொசுக்கள் மேலேறி பறவைகள் வாழ்வதற்கு இடமே இல்லாமல் உருவாகிவிடும் இதனை தடுக்காவிட்டால் ஹனிக்ரீப்பர்கள் முற்றிலும் அழிந்துவிடும்” என்றும் அவர் எச்சரிக்கின்றார்.

கொசுக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கினாலே நோய் பரவும் வாய்ப்புகள் குறையும் என்ற எண்ணப்படுகிறது.

இந்த முறை பெரிய அளவில் இதுவரை பயன்படுத்தப்படாவிட்டாலும் ஆராய்ச்சியாளர்கள் இதனை பெரிதும் நம்புகின்றனர். விதைப்பரப்பிகளாக சுற்றுச்சூழலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் அதனை பாதுகாக்க இதுபோன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழலையும் அரிய வகை பறவை இனங்களையும் பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *