• August 1, 2025
  • NewsEditor
  • 0

வணிக உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய உத்திகள் என ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் அடைகின்றன. ஆனால், இந்த வேகமான உலகத்தில் நாம் மறந்துபோன ஒன்று நம்முடைய ஆரோக்கியம். அதிலும் குறிப்பாக, இயற்கையான முறையில் நம் உடலை வலுப்படுத்துவது. இன்று நாம் காணப்போகும் ஒரு அற்புதம், நம் முன்னோர்கள் பயன்படுத்திய, ஆனால் நாம் மறந்துவிட்ட ஒரு பொக்கிஷம் – நெல்லிக்காய் டீ!

துவர்ப்பு நெல்லிக்காய்

நெல்லிக்காய், இந்திய பாரம்பரியத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. சித்த மருத்தவத்தில்  அமிர்தத்துக்கு இணையானது என்று நெல்லிக்காய் கூறப்படுகிறது, நெல்லிக்காயின் நன்மைகள் ஏராளம். பொதுவாக நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது அல்லது ஊறுகாய் போடுவது வழக்கம். ஆனால், நெல்லிக்காயை தேநீர் வடிவில் அருந்துவதும் நமக்கு சில நன்மைகளையும் நமக்கு அளிக்கிறது.

தன்னுடைய அப்பா நஞ்சில்லாமல் வளர்த்த பழமரங்களில் இருந்து வீணாகும் பழங்களை தடுக்க அவற்றை மதிப்புக்கூட்டி தானே ஒரு தொழில் முனைவோராக மாறி தனது தோட்டத்தில் கிடைக்கும் எல்லாப்பொருட்களையும் மதிப்புக்கூட்டி விற்கும்  கலைச்செல்வி அவர்களின் அருவி இக்கோ நிறுவனத்தின் சாகசக் கதையைத்தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.

“அருவி இக்கோ  ஆரம்பிக்க உங்களுக்கு தோன்றிய காரணம் என்ன? எது உங்களை நெல்லிக்காய் சார்ந்த தொழிலாக இதனை அமைக்க ஆர்வம் பிறந்தது?”

“நான் கலைச்செல்வி. பிறந்து வளர்ந்தது எல்லாமே திருப்பூரில் தான். திருப்பூர் பக்கத்தில் உள்ள இடுவாய் என்கிற கிராமம் தான் எங்கள் பூர்வீக கிராமம். எங்களது பூர்வீக நிலத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட பழ மரங்களை, 28-30 வருடங்களுக்கு முன்பே எனது அப்பா நட்டு வைத்தார். காரணம், அவருக்கு விவசாயத்தின் மீதும், மரங்கள் மீதும் இருந்த தீராத ஆசைதான். “எப்பவுமே ஒரு மண்ணோடு ஒரு பிணைப்பு (connection) நமக்கு இருக்கணும்” என்று சின்ன வயதிலிருந்தே எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தும் வளர்த்தார்.

இன்ஜினியரிங் முடித்துவிட்டு, சென்னை மற்றும் வெளிநாடுகளில் 12 வருடங்கள் வேலை செய்தேன். ஒரு கட்டத்தில் நாம் நம் சொந்த ஊருக்கே திரும்ப வேண்டும் என்று முடிவு செய்து ஊருக்கு வந்தேன்.

இந்தியா திரும்பிய பிறகு, ஒரு விஷயத்தைக் கவனித்தேன்.  அப்பா ஆசையாக வளர்த்த எங்கள் செடிகள் அனைத்தும் காய்ப்புக்கு வந்துவிட்டன. கிட்டத்தட்ட 20 வருடங்களில் எல்லாமே காய்க்கத் தொடங்கிவிட்டன. ஆரம்பம் முதலே இயற்கை விவசாயம் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று எங்கள் குடும்பத்தினர் அனைவரும் முடிவு செய்திருந்தோம்.

இப்ப வரைக்கும் என் அப்பா பெருமையா சொல்ற ஒரு விஷயம், “ஒரு கிராம் கூட நம்ம தோட்டத்துக்குள்ள ஒரு கெமிக்கல்ங்கிறது வராது.” பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என எதுவுமே பயன்படுத்தியது இல்லை. அது எங்களுக்குப் பெரிய பெருமையாகத்தான் இருக்கும். இந்த 20 வருடங்களில் அப்பா எல்லாவற்றையும் கவனித்து அந்த மரங்களை வளர்த்திருந்தார். நாங்கள் ஊருக்கு வந்தபோது, அந்த மரங்கள் எல்லாம் முழுமையாக காய்க்க ஆரம்பித்திருந்தன. சப்போட்டா, நெல்லிக்காய், மாங்காய், கொய்யா என எல்லாப் பழங்களும் நிறைய வர ஆரம்பித்தன.

அப்போது, இந்தப் பழங்கள் நாங்கள் உபயோகப்படுத்துவதற்குப் போக, மீதி நிறைய வீணாகின்றன (waste) என்ற கவலை (concern) எங்களுக்கு இருந்தது. எங்கள் தோட்டத்தில் முழுக்க முழுக்க இயற்கையாகவே வளர்ந்த மரங்கள். மாடு, ஆடு எல்லாமே தோட்டத்துக்குள்ளேயே வைத்திருக்கிறோம். அவை பகல் முழுவதும் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். இரவு மட்டும்தான் அடைப்போம். அதனால் வருடத்திற்கு இரண்டு முறை மக்கின மாட்டுச் சாணம் மட்டும்தான் போடுவோம். 

அப்போதுதான், “நாம் ஏன் இதை ஒரு ஆர்கானிக் சர்டிபிகேஷன் (organic certification) வாங்கக் கூடாது?” என்று யோசித்தோம்.. அவர் ஆத்மார்த்தமாக அந்த மரங்களை வளர்த்திருந்தார். பல இடங்களில் இருந்ததால், ஆர்கானிக் பொருட்களுக்கான தேவைகளைப் (demands) பற்றி நாங்கள் பார்த்திருக்கிறோம். “நமக்கிட்ட எல்லாமே இருக்கே, அப்போ ஆர்கானிக் சர்டிபிகேட் வாங்கிடலாமே” என்று முதலில் நாங்கள் தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் ஆர்கானிக் சர்டிபிகேஷன் பிரிவைதான் தொடர்பு கொண்டோம்.

கலைச்செல்வி

அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேவையான மண்ணின் பரிசோதனை (soil test), தண்ணீரின் பரிசோதனை (water test), நேரில் வந்து பார்வையிடுதல் (field visit) என எல்லா நடைமுறைகளையும் முடித்தார்கள். “மூன்று வருஷமும் சரியாக எல்லா தரங்களையும் (standards) பராமரித்தால், அதற்குப் பிறகு உங்களுக்குச் சான்றிதழ் (certificate) கிடைக்கும்” என்று சொன்னார்கள். அதற்கான முயற்சி எடுத்து முதல் வருடத்திற்கான சான்றிதழ் வாங்கினோம். தொடர்ந்து மூன்று வருடங்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் (documents) முறையாகக் கொடுத்த பிறகு, இப்போது எங்களது தோட்டம் முழுமையாக ஆர்கானிக் சான்றிதழ் பெற்றது.

நெல்லிக்காய் டீ உருவானது எப்படி என்றால்…

இப்போது எல்லாரும் தங்கள் நாளை டீயோ, காபியோ குடித்துதான் தொடங்குகிறார்கள். இந்தப் பழக்கம் சிலருக்கு அதிகமாகி, ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை குடிப்பார்கள். அப்போ, இந்த நெல்லிக்காயில் புதிதாக வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் நெல்லிக்காய் டீ ஐடியா வந்தது. இதை மக்களுக்குக் கொடுத்தால், ஒரு வேளையாவது டீ, காபி பழக்கத்தை விட முடியாதவர்கள் அதை குறைத்துக்கொண்டு, அதற்கு மாற்றாக இந்தக் tea ஆக அருந்தினால், அவர்களின் ஆரோக்கியத்திற்கும் (health) நிறைய நன்மைகள் கிடைக்கும், அதனால்தான் நெல்லிக்காயில் டீ தயாரித்தோம்.

நெல்லிக்காயில் வெல்லம் போட்டு மிட்டாய் தயாரித்தோம். வெள்ளைச் சர்க்கரை எங்கள் எந்தப் பொருட்களிலும் இருக்காது. இனிப்புக்கு வெல்லம் மட்டும் பயன்படுத்தினோம். அதேபோல, பாக்கு அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு, இஞ்சி, எலுமிச்சை, உப்பு எல்லாம் போட்டு ஒரு துருவல் மாதிரியான பொருளைத் தயாரித்தோம். இதற்கு நெல்லி சீவல் என்று பெயர். வெறும் மிளகு, உப்பு மட்டும் போட்டும் ஒரு பொருள் தயாரித்தோம்.

எங்கள் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் (ingredients) எல்லாமே எளிமையாக இருக்கும். அந்தப் பொருட்களும் கிட்டத்தட்ட இரண்டு, மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தும்படியாக இருக்கும்.

ஏன் எங்கள் தோட்டத்தின் காய்களை மட்டும் வைத்துப் பொருட்களை உருவாக்குகிறோம் என்றால், முதலில் சொன்னதுபோல, எங்கள் நிலத்தில் விளைவிக்கும் பொருட்கள் வீணாவதை தடுக்க வேண்டும். அதிலிருந்து பயனுள்ள பொருளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். எங்கள் தோட்டத்தில் முழுக்க முழுக்க இயற்கை விவசாய முறையில் வளர்ந்த பழங்கள் என்பதால், வெளியில் வாங்கினால் அதன் உண்மையான தன்மை இருக்காது. அவர்கள் எப்படி வளர்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.

அதனால்தான், இப்போது எங்கள் வணிக மாதிரி (model) படி, எங்கள் தோட்டத்தில் விளைவதைக் கொண்டு மட்டும் பொருட்களை உருவாக்குகிறோம். அப்போதுதான், அந்தப் பொருள் வெளியே போகும்போது அதன் தடத்தை (traceability) சரியாகக் கண்காணிக்க முடியும். மக்கள் நம்பி வாங்குற அளவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான், இதுவரைக்கும் எங்கள் தோட்டத்தில் உள்ள பொருட்களை மட்டுமே மாற்றித் தயாரித்து வருகிறோம்.”

`அமெரிக்கா ரிடர்னான தொழில்முனைவோர் கலைச்செல்வி’ எப்படி இந்த மாற்றம் நடைபெற்றது. நீங்கள் எப்படியெல்லாம் கற்றுக்கொண்டீர்கள் ?

“என்னோட இந்தப் புதிய முயற்சிக்கு வரணும்னு முடிவு பண்ணின பிறகு, நான் சொன்னதுபோல, கேவிகே (KVK – Krishi Vigyan Kendra)தான் முதன்முதலில் நாங்கள் போன இடம். அந்தக் கேவிகேவில் அவர்கள் எங்களுக்குக் கொடுத்த ஊக்கமும் தைரியமும் நிச்சயம் நான் மறக்க மாட்டேன். அந்தத் தைரியத்தை வைத்து,  அந்த உணவு விஞ்ஞானி (food scientist) , “நெல்லிக்காயை கொண்டு வாங்க” என்று சொன்னார்கள். அதை துருவி, சூரிய  உலர்த்தி (solar dryer) வழியே நெல்லித்துருவல் தயாரித்தோம். சூரிய  உலர்த்தி (solar dryer)  என்பதை நான் முதல் முதலில் கேவிகேவில்தான் பார்த்தேன்.

திருப்பூர் கேவிகேவில் சோலார் ட்ரையரை வாடகை முறையில் பயன்படுத்தும் வசதி வைத்திருக்கிறார்கள். அது என்னைப் போல அல்லது இந்த மாதிரி நினைக்கிற யாராக இருந்தாலும், எடுத்த உடனே பெரிய ட்ரையர் செட்டப் எல்லாம் வாங்கணும்னு இல்லாமல், நாம் செய்யும் வேலை சரியானதுதானா என்று பார்ப்பதற்கு, இந்த மாதிரி வாடகை முறையில் இருக்கும் ட்ரையர்களைப் பயன்படுத்தலாம். இது நமக்கும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். அது நமக்கு வேலைக்கு ஆகிறது என்றால், அதன் பிறகு நாம் பெரிய ட்ரையர்களுக்குப் போகலாம்.

அந்த வகையில் கேவிகேவில் இருந்த வாடகை ட்ரையரில்தான் நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் போய், போய் அந்தப் பொருட்களைத் தயாரித்துப் பார்த்து, என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து பார்த்தேன். முதலில் எனக்கு ஒரு பொருள், நெல்லிக்காய் துருவல் என்பதுதான் கிடைத்தது. நான் பச்சையாகக் கொண்டுபோன நெல்லிக்காய், அங்கு ஒரு நெல்லிக்காய் சீவல் என்ற பொருளாக மாறும்போது, அது உண்மையிலேயே எனக்குப் பெரிய மகிழ்ச்சியான தருணம். ஏனென்றால், அந்த நெல்லிக்காய்களை நான் இப்படிச் செய்யாமல் விட்டிருந்தால், அது மரத்துக்கு அடியில் மக்கிப் போய் காணாமல் போயிருக்கும். இப்போது மூன்று மாதம் வரைக்கும் வைத்து சாப்பிடக்கூடிய சத்து நிறைந்த ஒரு நெல்லிக்காய் சீவல் என் கையில் கிடைத்தது. அது எனக்கு மிகப்பெரிய தைரியத்தைக் கொடுத்தது. நாங்கள் போற பாதை சரிதான் என்பதற்கு அந்த ஒரு முதல் பொருள் தயாரித்த பிறகு நிச்சயம் கிடைத்தது என்று சொல்ல வேண்டும். இதற்குக் காரணமான திருப்பூர் பொங்கலூரில் உள்ள கேவிகேவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பழங்கள் வீணாவதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று நாங்கள் நிறைய யோசித்தபோதுதான், மதிப்பு கூட்டுதல் (value addition) மட்டும்தான் ஒரே வழி என்பது எங்களுக்குப் புரிந்தது. அதாவது, விளைவிப்பவர்களுக்குப் பழங்கள் வீணாகாது. அதே சமயம், மக்களுக்கும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக ஒரு பயனுள்ள பொருளாகவும் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

கேவிகே என்பது கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் இருக்கும். இது ஐசிஏஆர் (ICAR – Indian Council for Agricultural Research) கீழ் வரும் ஒரு அமைப்பு. எங்கள் திருப்பூருக்கான கேவிகே பொங்கலூரில் இருக்கு. அங்குதான் முதன்முதலில் போனோம். “எங்கள் தோட்டத்தில் உள்ள பழங்களை மதிப்பு கூட்டல் செய்ய வேண்டும். அதற்கு எங்களுக்குச் சில ஆலோசனைகளைக் கொடுங்கள்” என்று கேட்டபோதுதான், எங்களுக்குக் கேவிகே-வின் பங்கு அல்லது அவர்கள் என்ன செய்வார்கள், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது தெரிந்தது.

ஒவ்வொரு கேவிகேவிலும் ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்கள் இருப்பார்கள். அதாவது மண் விஞ்ஞானி (soil scientist), பூச்சிகளுக்கு (insects) ஒரு விஞ்ஞானி, உணவு விஞ்ஞானி (food scientist), விலங்குகளுக்கு (animals) ஒரு விஞ்ஞானி என எல்லா விஞ்ஞானிகளும் இருப்பார்கள். அதில் நாங்கள் உணவு விஞ்ஞானி இடம் போனோம். அங்கே கவிதாஸ்ரீ என்ற மேடம் தான் அப்போது உணவு விஞ்ஞானியாக இருந்தார். அவரிடம் ஒரு மணி நேரம் பேசினோம்.  அவரும் ஆலோசனைக் கொடுத்தார்

இன்னொரு விஷயம், நாங்கள் முதலில் என்ன சொன்னோம் என்றால், “எப்படி எங்கள் தோட்டத்திற்கு எந்த பூச்சிக்கொல்லியோ, களைக்கொல்லியோ அடிக்காமல் இயற்கையாக வளர்க்கிறோமோ, அதேபோல நாங்கள் மதிப்பு கூட்டுதல் என்று இறங்கினால், இதே போல ஒரு இயற்கையான பொருளைத்தான் செய்ய வேண்டும் என்பதில் சீரியஸாக இருக்கிறோம்” என்று சொன்னோம். பின் அவர் நெல்லியிலிருந்து ஆரம்பிக்க அறிவுறுத்தினார், “நாங்கள் ஏன் நெல்லிக்காயில் ஆரம்பித்தோம் என்பதற்கு ஒரு முதல் காரணம், எங்களுக்கு இந்த எண்ணமெல்லாம் வரும்போது, முழு சீசனில் (full season) இருந்தது நெல்லிக்காய் மட்டும்தான். அதுதான் கண்ணுக்கு முன்னாடி அவ்வளவு வீணாகிக்கொண்டிருந்தது. அதிலிருந்து ஏதாவது பண்ண வேண்டும், பண்ண வேண்டும் என்ற எண்ணம் எங்களைக் கிட்டத்தட்டத் தூங்க விடாமல் செய்தது. அதனால்தான் நாங்கள் நெல்லிக்காயை முதலில் ஆரம்பித்தோம்.

கேவிகேவில் பயிற்சி பெற்ற பிறகு, நாங்கள் எங்கே பயிற்சி எடுக்க வேண்டும் என்று விசாரித்துப் பார்த்தபோது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (Tamil Nadu Agricultural University), நிஃப்டம் (NIFTEM), தஞ்சாவூர்; பெரியகுளத்தில் உள்ள ஹார்டி பிசினஸ் இன்குபேஷன் ஃபாரம் (Horti Business Incubation Forum), டிஐ என பல இடங்களில் பயிற்சி கிடைத்தது. எங்கே நெல்லிக்காயில் பயிற்சி கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும், அங்கே சென்று என்னென்ன கற்றுக்கொள்ள முடியும் என்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் செலவு செய்தோம். அதன்பின்னர் இந்த தொழில்முனைவோர் என்ற அடையாளத்தைப் பெற்றேன்.”

நெல்லி

“ஒரு தொழில் முனைவோராக நீங்கள் அந்த இரண்டு வருடத்தில் சந்தித்த சிக்கல்கள் என்ன?”

“பயிற்சியில் சிரமங்கள் என்று பார்த்தால், நிறைய இருந்தன. நான் இயற்கை விவசாய முறையில் வளர்ந்த காய்களை மட்டும் வைத்துப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்று ஒரு உறுதிமொழி எடுத்திருந்தேன். அதேபோல, வெள்ளை சர்க்கரையோ, பாதுகாப்புக் கலவைகளோ (preservatives) எதுவும் பயன்படுத்தக் கூடாது என்பது எங்கள் கொள்கை (policy). நாங்கள் பயிற்சிக்கு எங்கே போனாலும், அங்கே எங்களுக்குச் சில சவால்கள் இருந்தன. காரணம், அவர்கள் பொதுவான பயிற்சிகளைக் கொடுப்பார்கள். நமக்குத் தனிப்பட்ட முறையில் (specifically) இந்தப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கேட்கும்போது, நாங்கள் எதிர்பார்த்த மாதிரி பயிற்சிகள் அங்கு கிடைக்கவில்லை.

அப்போது எங்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. “ஓகே, நாம் எல்லோரும் செய்வதைவிட வித்தியாசமாக, ஒரு நல்ல பொருளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கு. அதற்கு, நம் முயற்சி அதிகமாக வேண்டும். அவர்கள் நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பார்கள்” என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த எண்ணம் அப்போதுதான் தகர்ந்து போனது. இனி நாங்களாகத்தான் சொந்த முயற்சியை எடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் தகவல்களை (inputs) வைத்து, நாங்களாகத்தான் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் போக வேண்டும், முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பது ஆரம்பத்தில் சிரமமாகத் தெரிந்தாலும், அந்த உண்மையை உணர்ந்த பிறகுதான் நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி செய்ய ஆரம்பித்தோம். அந்தச் சிரமம் என்று நாங்கள் முதலில் நினைத்த அந்தச் சூழ்நிலையில்தான், நாங்கள் இன்னும் கொஞ்சம் புதிய சிந்தனைகளை (creative) பயன்படுத்த ஆரம்பித்தோம்.

உதாரணத்திற்கு, நெல்லிக்காய் மிட்டாய் தயாரிப்பது குறித்து வெளியில் எல்லா இடங்களிலும் வெள்ளைச் சர்க்கரை போட்டுத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். அதற்கு மாற்று ஏதாவது செய்ய வேண்டும் என்று சில இடங்களில் நாம் கேட்கும்போது, “நீங்களே முயற்சி செய்யுங்கள்” என்று சொல்வார்கள். இது ஒரு நியதி. அவர்கள் நிலையாக (standard) வைத்திருப்பதைத்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதற்கு ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால், நாம் தான் அதைச் செய்ய வேண்டும் என்பது புரிந்த பிறகு, நாங்கள் நிறைய புதிய விஷயங்களைச் செய்ய ஆரம்பித்தோம்.”

`உங்களுடைய தொழில்முனைவுப் பயணத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான ஆதரவுகள் கிடைத்தது? “

“என்னுடைய இந்த பயணத்தில், ஆதரவு என்று பார்த்தால், குடும்பத்திற்கு அடுத்தபடியாக கேவிகே, திருப்பூர் ஊழியர்கள் மற்றும் நான் பயிற்சி எடுத்துக்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் சந்தித்த பயிற்சியாளர்கள் (trainers) ஆகியோரின் தொடர் வழிகாட்டுதலில்தான் நான் இதைச் செய்து வருகிறேன்.

அதேபோல, மத்திய, மாநில அரசுகள் இந்த மாதிரி தொழில் செய்பவர்களுக்கு மானியத்துடன் நிறைய கடன்கள் கொடுக்கிறார்கள் என்ற விஷயத்தைத் தெரிந்துகொண்டேன். எங்கள் நிலைமைக்கும், எங்கள் முயற்சிக்கும் என்னென்ன திட்டங்கள் (schemes) இருக்கு என்று பார்த்தபோது, பிஎம்எஃப்எம் (PMFME) என்கிற மத்திய அரசு திட்டம், என் போன்ற நிலையில் இருக்கும் எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிய வந்தது. அதைப் பற்றி எல்லாமே தெரிந்துகொண்டு, இப்போது நாங்கள் அந்த 35% மானியம் கொடுக்கும் திட்டத்தைப் பயன்படுத்தி, எங்களுக்குத் தேவையான இயந்திரங்களை (machineries) வாங்கியிருக்கிறோம்.

இதற்கான நடைமுறை என்னவென்றால், நமக்கு என்னென்ன இயந்திரம் வேண்டும் என்பதற்கான விலைப் பட்டியலை (quotations) முறையாக வாங்கி, வங்கியில் சமர்ப்பித்து, அரசு நடைமுறைகளின்படி அனுமதி கிடைத்த பிறகு, அந்த இயந்திரங்கள் அனைத்தும் கடன் உதவியில் கிடைத்துவிடும். இது போக 35% மானியம் வருவதால், நாம் திருப்பிச் செலுத்தும் தொகை குறைவாகத்தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இரண்டு வருடங்கள் நாங்கள் 90% வேலைகளைக் கையால் (manually)தான் செய்தோம். இப்போது தொழில் வளர வளர எங்களுக்கு இயந்திரங்களின் ஆதரவு தேவைப்படுகிறது என்ற நிலை வந்ததால், நாங்கள் இந்த கடன் உதவியைப் பெற்று, எங்களது வேலைகளில் எதையெல்லாம் எளிதாக இயந்திரத்தில் செய்ய முடியுமோ, அந்த வேலைகளை எல்லாம் தானியக்கமாக்கிவிட்டோம் (automate). அதற்காக இந்த பிஎம்எஃப்எம் கடன் திட்டம் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.”

“உங்களிடம் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் இருக்கிறது?”

“இப்போது நாங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் பொருட்கள் என்னவென்றால், முதலில் நெல்லி துருவல் என்ற பொருளில் தான் ஆரம்பித்தோம். பிறகு, சர்க்கரை இல்லாமல் வெல்லத்தில் நெல்லிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கு நிறைய முயற்சி செய்து, அதையும் ஒரு பொருளாகக் கொண்டு வந்தோம். மூன்றாவது, பல இடங்களில் கற்றுக்கொண்டது, இஞ்சி, எலுமிச்சை, உப்பு எல்லாம் பயன்படுத்தி பாக்கு மாதிரியான ஒரு பொருள். இந்த மூன்றுதான் முதலில் நாங்கள் ஆரம்பித்தோம்.

பிறகு, ஆரம்பித்ததில் நாங்கள் இதை ஸ்டால்கள் (stall) போட்டு விற்பனை செய்தோம். எங்கே ஸ்டாலுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் போனோம். ஏனென்றால், இதை நாங்கள் தயாரித்துவிட்டோம். இப்போது இதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது, அவர்கள் நேரில் சாப்பிட்டுப் பார்த்து கருத்து (feedback) சொல்லும்போதுதான் எங்களுக்குத் தெரியும். அதில் என்ன தவறு இருக்கிறது, என்ன நேர்மறை (positive), என்ன எதிர்மறை (negative) இருக்கிறது, எதைச் சரிசெய்ய வேண்டும் என்பது எல்லாமே அப்பதான் தெரியும். அதனால்தான், கிட்டத்தட்ட ஆரம்பத்தில் ஒரு வருடம், ஸ்டால் எங்கே கிடைத்தாலும் போயிருவோம். அங்கு மக்களுக்கு ருசிக்கக் கொடுத்து, அவர்களின் கருத்தைக் கேட்டு, கேட்டு, ஒவ்வொன்றாக மேம்படுத்தினோம் (improve).

அப்போதுதான் ஒரு வாடிக்கையாளர் (customer), “நெல்லிக்காயில் பொடி வேணும்” என்று கேட்டார். அதுவரைக்கும் நாங்கள் பொடி செய்யவே இல்லை. உடனே நெல்லிக்காய் பொடியையும் முயற்சி செய்து, அதையும் ஒரு பொருளாகக் கொண்டு வந்தோம். சில வாடிக்கையாளர்கள், “இனிப்பும் வேண்டாம், வெல்லமும் வேண்டாம், உப்பும் வேண்டாம், ப்ளைனாக (plain) வேண்டும்” என்று கேட்டபோது, நெல்லிக்காயை ப்ளைனாகக் காய வைத்து ஒரு பொருளாகக் கொண்டு வந்தோம்.

அதேபோல, மக்களை டீ, காபி பழக்கத்திலிருந்து கொஞ்சம் குறைத்துக்கொள்வதற்கு, நெல்லிக்காய் டீ கொடுத்தோம். எங்கள் தோட்டத்தில் முருங்கைக்கீரை, கொய்யா இலை எல்லாம் இருப்பதால், கொய்யா இலையில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கு என்று தெரிந்துகொண்டு, கொய்யா இலை டீ ஒன்றைக் கொண்டு வந்தோம். முருங்கையும் நெல்லியும் சேர்த்து நெல்லி முருங்கை சூப்ஒன்றைக் கொண்டு வந்தோம். இப்படி நாங்கள் ஒவ்வொரு பொருளாக யோசித்துக் கொண்டு வருகிறோம்.

சிலது வாடிக்கையாளர்கள் கேட்பார்கள், “கருவேப்பிலை பொடி வேண்டும்” என்று கேட்டதால், கருவேப்பிலை செடிகளை அதிகப்படுத்தினோம். “முருங்கை பொடி வேண்டும்” என்றதால், இருந்த 10 முருங்கை செடிகளோடு இன்னொரு 10 செடிகளை வைத்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் அளவுக்குக் கொண்டு வந்தோம். இப்படித்தான் நாங்கள் ஒவ்வொரு பொருளாகக் கொண்டு வந்து கொண்டிருந்தோம்.

அதுபோக, நாங்கள் நிறைய கருத்தரங்குகளில் (seminars) கலந்துகொண்டபோது, மக்களுக்குப் பூக்களின் டீ அருந்துவதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். அதைப் பற்றிச் சில ஆராய்ச்சிகள் (research) செய்தோம். அதன் விளைவாக, இப்போது சங்குப்பூ, செம்பருத்தி, ஆவாரம் பூ போன்றவற்றில் எல்லாம் டிப் டீ (dip tea) கொண்டு வந்திருக்கிறோம். டிப் டீ-யில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இல்லாமல், வடிகட்டும் தாள் (filter paper) இல்லாமல், சுத்தமான ஆர்கானிக் காட்டன் துணிப்பைகளை நாங்களே தயாரித்து, அந்தத் துணிப்பைகளைத்தான் டிப் டீ-க்கு பயன்படுத்துகிறோம். இதன் மூலம், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எதுவும் வராது.

அதேபோல, எங்கள் தோட்டத்தில் நாவல் பழ மரம் இருக்கு. அது வருடத்திற்கு ஒரு முறை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வரும். அப்போது அதன் விதைகள், நாவல் கொட்டை பொடி என்று சொல்லி, அதையும் ஒரு பொருளாக அறிமுகப்படுத்தினோம். இப்போது எங்கள் பொருட்களின் வரிசையில் (product range) எல்லாமே, எங்கள் தோட்டத்துக்குள் என்னவெல்லாம் விளைகிறதோ, அதை ஒரு பொருளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறோம்.”

“உங்களுடைய  எதிர்காலத் திட்டங்கள்?”

“எதிர்கால விரிவாக்கம் (future expansion) என்று பார்த்தால், கெமிக்கல் இல்லாத விவசாயம் மற்றும் கெமிக்கல் இல்லாத மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைக் கொண்டு வருகிறோம். இந்த எங்களது கிட்டத்தட்ட 25-30 வருட மரபுப் பெருமையை (legacy) பண்ணை சார்ந்த செயலாக்க மாதிரியாக (farm-based processing model) கொண்டு வர வேண்டும் என்பது ஒரு திட்டம். அதேபோல, பயிர் பல்வகைப்படுத்துதல் (crop diversification). இன்னும் கொஞ்சம் எங்கள் ஆர்கானிக் பண்ணையிலேயே தேவை (demand) இருக்கும் நெல்லிக்காய் போன்ற மரங்கள், செடிகளை இன்னும் அதிகப்படுத்தி, பண்ணைக்குள்ளேயே ஒரு முழுமையான செயலாக்க யூனிட் (processing unit) அமைக்க வேண்டும். அந்தப் பழத்தின் இயல்பான சுவை மாறாமல், அதன் ஊட்டச்சத்து (nutrition) அப்படியே கிடைக்கும்படி அமைக்க வேண்டும் என்பது எங்களது எதிர்காலத் திட்டம்.

இன்னொன்று, இ-காமர்ஸில் (e-commerce) அதிகமாக கவனம் செலுத்தலாம் என்று இருக்கிறோம். இது நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு (direct to customer) விற்கும் மாதிரி என்பதால், இ-காமர்ஸ் ஒரு நல்ல வாய்ப்பாகத் தெரிகிறது. டிஜிட்டல் பிரசென்ஸை (digital presence) இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

அதேபோல, எங்களைப் போலவே செய்து கொண்டிருக்கும் இயற்கை விவசாயிகள் யாரையாவது நாங்கள் கண்டுபிடித்தால் அல்லது அவர்கள் எங்களுக்குத் தெரிய வந்தால், அவர்களிடம் மூலப் பொருட்களை (raw materials) வாங்கிக்கொள்ளலாம். அவர்கள் இதேபோல இயற்கை விவசாய முறையில் செய்கிறார்களா என்று முறையாக ஒரு தடத்தை (traceability) பார்த்து, அதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது அவர்களுக்கும் ஒரு உதவியாக இருக்கும்.

இதேபோல, இன்னும் தொடர்ச்சியாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, இன்னும் என்னென்ன பொருட்கள் எல்லாம் ஆரோக்கியத்திற்குத் தேவையானவையாக, பாதுகாப்புக் கலவைகள் இல்லாமல் கொண்டு வர முடியும் என்று பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, இந்த டிப் டீ போன்ற தயாரிப்புகளைக் கொண்டு வரலாம்.”

விவசாயச் சுற்றுலா

அதேபோல, எங்கள் பண்ணையை மக்களுக்குத் திறந்திருக்கிறோம். அவர்களே வந்து பழங்களைப் பறித்துக்கொண்டு, அதையும் ஒரு அனுபவமாகச் (experience) செய்யலாம். அதே மாதிரி, அருகிலிருக்கும் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கும் ஃபீல்ட் ட்ரிப்பிற்கு (field trip) திறந்திருக்கிறோம். இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஆறு பள்ளிகள் ஃபீல்ட் ட்ரிப்பிற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்கள் தயாரிப்பு முறைகள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு சின்ன விழிப்புணர்வு (awareness) கிடைக்கிற மாதிரி, பண்ணை சுற்றுலாவையும் (farm tourism) இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும் என்பதும் எங்கள் எதிர்காலத் திட்டம்.

(சாகசம் தொடரும்)

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *